பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

மாயா விநோதப் பரதேசி

மணியைப் பார்க்க வந்த தினத்தில் முன் தடவைகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிக விசேஷமாகவும் ஜாக்கிரதையாகவும் தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தான் ஆதலாலும், அவன் வேஷந் தரித்து வந்திருக்கிறான் என்று எவரும் சிறிதும் சந்தேகிக்காதபடி அவன் தத்ரூபம் யெளவன ஸ்திரீ போலவே காணப்பட்டான். உண்மையில் அவனுக்கு இருபது வயதிற்கு அதிகம் ஆயிருந்தது. ஆனாலும், ஸ்திரீ வேஷத்தில் அவனது வயது இரண்டு மூன்று குறைந்தே தோன்றியது. நாடகங்களில் வேஷங்களுக்குத் தேவையான உயர்ந்த பனாரீஸ் புடவைகள், பளபளப்பான நகைகள் முதலியவைகளை சில வியாபாரிகள் வாடகைக்குக் கொடுத்து வாங்கிக் கொள்வது வழக்கம் ஆதலால், அவர்களிடம் பழகியிருந்த கோபாலசாமி அன்றைய தினம் கந்தசாமிக்கு வேண்டிய ஆடை ஆபரணங்களை எல்லாம் அந்த வர்த்தகர் ஒருவரிடம் வாடகைக்கு வாங்கிக் கொண்டு வந்திருந்தான். கந்தசாமி அந்த ஆடை ஆபரணங்களில் தனது ஆண்வடிவத்தை முற்றிலும் மறைத்து மனதை மயக்கும் சுந்தரமும் வசீகரமும் பரிபூர்ணமாக நிரம்பப் பெற்ற மடமங்கை போல மாறி உண்மையிலேயே ஸ்திரீயாகப் பிறந்தோர் அனைவரும் நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்ற அரிய குணங்களைத் தன்னிடம் கற்றுக்கொள்ளத் தக்கபடி அழகாக நாணிக் கோணி அன்னநடை நடந்த மான்போல மருண்டு புடவைத் தலைப்பை அடிக்கடி இழுத்திழுத்துத் தனது உடம்பை மூடிக்கொண்டு காலின் கட்டை விரலைப் பார்த்தபடி நடந்து வந்த காட்சி கண்கொள்ள வசீகரக் காட்சியாக இருந்தது. அப்போதே மலர்ந்து விரிந்த ரோஜாப் புஷ்பத்தைத் தாங்கிய பூங்கொம்பு தென்றல் காற்றில் அசைந்து துவளுவது போல, அவனது பொற்கொடி போன்ற மேனி அழகாகத் துவண்டு நெளிந்து, காண்போர் மனதைக் கொள்ளை கொண்டது. அவனோடு கூடவே சதாகாலமும் இருந்து பழகியவனும், அவன் பெண் வேஷந் தரிக்கையில் பக்கத்திலேயே இருந்தவனுமான கோபாலசாமியே அவனது மாறுபட்ட கோலத்தைக் கண்டு பிரமித்து, அவன் உண்மையில் ஸ்திரீதானோ என்று சந்தேகித்ததன்றி, அவனைக் கட்டிப்பிடித்து ஒருதரமாவது