பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

மாயா விநோதப் பரதேசி

சங்கிலி உள்ள கடிகாரம் முதலிய அலங்காரங்களோடு நிரம்பவும் பெரிய மனிதன் போலக் காட்டிக் கொண்டு கொடிமுல்லை யம்மாளுக்குப் பின்னாகத் தொடர்ந்து வந்து சேர்ந்தான். கந்தர்வ ஸ்திரீ போன்ற மனமோகன ரூபம் உடையவளாய்த் தோன்றிய கொடிமுல்லை அம்மாளோடு கூட வருவதையும், தான் அவளது கணவன் என்று மற்றவர் கருதுவதையும் கோபாலசாமி நிரம்பவும் பெருமையாக மதித்ததன்றி, அதைப்பற்றி மிகுந்த உற்சாகமும், பூரிப்பும் அடைந்தவனாகக் காணப்பட்டான். அதற்கு முன்னரே, கோபாலசாமியும் கந்தசாமியும் பேசி முடித்த காலத்தில் கந்தசாமி மாத்திரம் மனோன்மணியண்டை போய் அவளுடன் பேசுவதென்பதும், கோபாலசாமி வெளியில் இருப்பதென்பதும் அவர்களது ஏற்பாடு. ஆனால், மனோன்மணி அம்மாள் எல்லோரையும் மேலே அழைத்து வரும்படி டலாயத்தினிடம் செய்தி சொல்லி அனுப்ப, அவன் கீழே சென்று அந்தச் செய்தியைத் தெரிவிக்க, தனது நண்பனுக்கு மனைவியாகப் போகும் யெளவனப் பெண் ஏகாந்தமாய் இருக்கும் மேன் மாடத்திற்கு வர கோபாலசாமி விரும்பாமல், தான் கீழேயே இருப்பதாகக் கந்தசாமியிடத்தில் ரகசியமாகக் கூறினான் ஆனாலும், கந்தசாமி அவனையும் தன்னோடு கூட வரும்படி வற்புறுத்தி மேலே அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். இருவரும் மேன்மாடத்தை அடைந்து மனோன்மணி அம்மாளினது வடிவத் தோற்றத்தையும் நடையுடை பாவனைகளையும் பார்த்தவுடனேயே, அவள் எப்படி இருப்பாள் என்று அதற்கு முன் கடற்கரையில் அவர்கள் இருவரும் எதிர்பார்த்தது போலவே அவள் சகலமான அம்சங்களிலும் இருக்கிறாள் என்ற அபிப்பிராயமே அவர்களது மனதில் பட்டது. அவள் இந்திய ஸ்திரீகளின் நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்ற குணங்கள் இன்றி வெள்ளைக்கார ஸ்திரீகளைப் போல எல்லோரிடமும் தாராளமாகவும் கூச்சம் இன்றியும் நடந்து கொள்வதைக் காண கோபாலசாமியின் மனம் பெரிதும் கிலேசம் அடைந்தது. கந்தசாமி அடக்கம், பணிவு, நாணம் முதலிய குணங்கள் சம்பூர்ணமாக நிறைந்துள்ளவளையே தான் அடைய விரும்புவதாகப் பன்முறை கூறியிருந்தான் ஆதலால், அந்தக் குணங்கள் எல்லாம்