பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

197

இல்லாதவளாய் அந்தப் பெண் காணப்பட்டமையால், கந்தசாமி அவளை மணக்கச் சம்மதிக்க மாட்டான் என்பது நிச்சயமாகத் தோன்றியதன்றி, வந்திருப்பது தனது கணவன் என்பதை அறியாமல் அவள் தாறுமாறாக நடந்துகொண்டு விடுவாளோ என்று கவலையுற்று, அவள் பேச ஆரம்பித்த போதெல்லாம் அவனது மனம் ஒருவித அச்சத்தையும் கூச்சத்தையும் அடைந்தது. அவர்கள் இருவரும் சம்பாஷிக்கும்போது தான் அவ்விடத்தில் இருப்பது தவறென்றும், எப்படியாவது தான் கந்தசாமியைத் தனிமையில் விட்டுப் பிரிந்து கீழே போய்விட வேண்டும் என்றும் அவன் தனக்குள்ளாகவே தீர்மானித்துக் கொண்டான். தனது நண்பன் அவனது மனைவியின் நடை நொடி பாவனைகளைப் பரீட்சிக்கையில், அவள் ஏதாவது தவறாக நடந்து கொண்டால், அப்போது கந்தசாமி மாத்திரம் இருந்தால், அது அவனது மனதில் அதிகமாய் உறைக்காதென்றும், அதை அவன் அதிகமாய்ப் பாராட்டமாட்டான் என்றும் அவர்களோடு பிறரும் பக்கத்தில் இருந்தால் அப்போது அந்தத் தவறு கந்தசாமிக்குப் பன்மடங்கு பெரிதாகவும் மன்னிக்கத் தகாத பெரிய குற்றமாகவும் தோன்றும் என்றும் கோபாலசாமி நினைத்தான். ஆகவே மனோன்மணியின் குணாதிசயங்கள் அதிகமாய் வெளியாகும் முன் தானும் வேலைக்காரப் பெண்ணும் அவர்களை விட்டுப் பிரிந்து கீழே போய்விடுவதே நலமானதென்றும், அவர்களுக்கு ஒருவேளை கலியாணம் முடிவதாக இருந்தாலும், தாங்கள் இருப்பதால், அது தவறிப் போனாலும் போகக்கூடும் என்றும், கோபாலசாமி தனக்குள் நினைத்து ஒருவிதமாக முடிவு செய்து கொண்டிருந்தான்.

ஆனால் கந்தசாமியின் மனநிலைமையோ இன்னதென்று விவரிக்க இயலாத குழப்ப நிலைமையாக இருந்தது. மனோன்மணி பி.ஏ. வகுப்பில் படிக்கிறாள் என்று கேள்வியுற்ற முதலே, அவள் வெள்ளைக்காரர் நாகரிகத்தைப் பூர்த்தியாகப் பின்பற்றினவளாகத் தான் இருப்பாள் என்று அவன் நிச்சயித்துக் கொண்டான். ஆனாலும், தான் எப்படியாவது முயற்சித்து அவளைப் பார்த்து அவளுடன் பேசி அவளது மன நிலைமையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒருவித அவாவினால்