பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

மாயாவிநோதப் பரதேசி

தனது கொடுமைகளையே காட்டுவதில்லை என்று மஞ்சள் வெயிலான ரீமுகத்தின் மூலமாக உலகுக் கெல்லாம் நற்செய்தி சொல்லி அனுப்பிவிட்டு, மேற்றிசைக் கடலான தனது சப்பிரமஞ்சத்திற்கருகில் நின்று தனது துணைவி வருகிறாளோ என்று பார்ப்பவன் போலத் தோன்றினான். இராக் காலத்தின் சக்கரவர்த்தினி பவனி புறப்படப் போகிறாள் என்று பிரஜைகளுக்குப் பறையறைவிப்பது போல அலைகள் எல்லாம் கொந்தளித்து எழுந்து ஆனந்த வெறிகொண்டு ஓடி வந்து கரையில் மோதி மோதித் திரும்பி எதிர்கொண்டு சென்றன. ராஜாத்தியின் பணிப்பெண் இளந்தென்றல் வடிவமாகத் தோன்றி இனிமையையும் குளிர்ச்சியையும் அள்ளி நாலா பக்கங்களிலும் வீசி எல்லோர்க்கும் அபயஸ்தம் அளிப்பவர் போல வெளிப்பட்டு எங்கும் நிறைந்து போயினர். அன்றைய தினம் பெளர்ணமி திதியாதலால், சம்பூர்ணபிம்ப வடிவமாகத் தாரகைகளின் சக்கரவர்த்தினி, அப்போதே நீராடி சுத்தமாக அலங்கரித்துக் கொண்டு எழுபவள் போல, அமிர்தத்துளிகளை ஜிலிர் ஜிலிரென்று அள்ளி இறைத்துக் கொண்டு எல்லா ஜீவராசிகளையும் நோக்கி சந்தோஷமாக நகைத்த வண்ணம் அதியுல்லாசமாகப் பவனி புறப்படவே, பகல் முழுதும் சூரியனது உக்கிரத்தால் கருகி வெதுப்பப்பட்டுக் கிடந்த ஜீவ ஜெந்துக்களின் மனதில் குதூகலமும், பூரிப்பும், பேரானந்த வெள்ளமும் பொங்கி எழுந்து கரைபுரண்டோட ஆரம்பித்தன.

மேலே விவரிக்கப்பட்ட மணலில் சயனித்திருந்த சுந்தர ரூபன் மேற்குத் திக்கில் சூரியன் அஸ்தமித்ததையே வியப்போடும் மகிழ்ச்சியோடும் பார்த்துக் கொண்டிருந்து சிறிது நேரங்கழித்துக் கிழக்கில் திரும்ப, அந்தத் திசையில் இன்பமயமாக எழுந்து நின்ற சந்திரன் அவனது திருஷ்டியில் பட்டது. அவன் மட்டற்ற குதூகலமும் பூரிப்பும் அடைந்து, “அடே கோபால்சாமீ! அதோ கிழக்குப் பக்கம் பாரடா? இப்போது மேற்குத் திக்கில் மறைந்த சூரியனே திரும்பவும் கிழக்குத் திக்கில் வந்துவிட்டது போல இருக்கிறது பார்த்தாயா? இன்று சந்திரபிம்பம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது பார்?" என்றான்.