பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

மாயா விநோதப் பரதேசி

இன்பமாகத் தோன்றும் போலிருக்கிறது. அதுபோல நம்முடைய தேசத்து ஸ்திரீகள் தங்களுடைய அடிமை நிலைமையே உத்தமமானது என்று நினைக்கும்படி நம்முடைய மனிதர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். இதை எல்லாம் ஒழிப்பதற்கு இங்கிலீஷ் படிப்புதான் முதல் தரமான மருந்து. இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் இரண்டொரு தலைமுறைகளில் இந்த இங்கிலீஷ் படிப்பு சாதாரண ஜனங்களுக்கெல்லாம் பரவிவிடும். அவர்கள் இப்போது கொண்டுள்ள அநாகரிகமான பற்பல விஷயங்கள் மாறுபட்டுப் போகும் என்பது நிச்சயம். நம்முடைய தேசத்து ஆண்பிள்ளைகள் ஸ்திரீகளின் விஷயத்தில் இவ்வளவு கொடுமை செய்து வருவது எவ்வளவு காலந்தான் கடவுளுக்குச் சம்மதமாயிருக்கும். இதை எல்லாம் ஓழிப்பதற்குத் தான், இரண்டாயிரம் மைல் தூரத்துக்கு அப்பால் ஒரு சிறிய தீவில் இருக்கும் இந்த இங்கிலீஷ்காரரைக் கொண்டு வந்து விட்டு அவர்கள் நம்முடைய ஆண் பிள்ளைகளை எல்லாம் அடக்கி ஆளும்படியும், அவர்களுடைய பாஷையும் நாகரிகமும் கட்டாயமாக நம்முடைய தேசத்தில் பரவும்படியும் கடவுள் தந்திரம் செய்திருக்கிறார். இப்போதே இங்கிலீஷ் படித்த நம்முடைய ஆண்பிள்ளைகளில் பெரும்பாலோர் சரியான கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கி எல்லோரும் சமம் என்ற தர்மத்தை அனுபவத்தில் நடத்திக்காட்ட ஆரம்பித்து விட்டார்கள். கூடிய சீக்கிரம் நம்முடைய தேசத்துக்கு நல்லகாலம் பிறக்கும். அதைப்பற்றி சந்தேகமே இல்லை” என்றாள். அதைக் கேட்ட கொடி முல்லையம்மாள் இரண்டொரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்தாள். தான் வந்தவுடனேயே மனோன்மணியம்மாளோடு பெருத்த வாக்குவாதத்தில் இறங்கிவிட்டால் அவளது மனம் கசந்துபோம் என்றும், அதன் பிறகு ஒருகால் அவள் தங்களை வெளியில் அனுப்பினாலும் அனுப்பி விடுவாள் என்றும், அதன் பிறகு அவளது குணாதிசயங்கள் முழுவதையும் நன்றாக அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும் என்றும் நினைத்த கொடி முல்லையம்மாள் இனிமையும் சந்தோஷமும் அன்பும் ததும்பிய முகத்தோடு மனோன்மணியம்மாளை நோக்கி, “அம்மா! நான் இங்கிலீஷ் பாஷை கற்காதவள். ஆகையால் அந்தப் பாஷையின்