பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

மாயா விநோதப் பரதேசி

இன்னம் இரண்டொரு தலைமுறை காலத்தில் இங்கிலீஷ் பாஷை நம்முடைய நாடு முழுதிலும் நன்றாகப் பரவிவிடும் பக்ஷத்தில், எல்லோரும் அந்தப் பாஷையின் பெருமையையும், இங்கிலீஷ்காரருடைய பழக்க வழக்கங்களின் உசிதா உசிதங்களையும் தமக்குத்தாமே கண்டு தங்களை அவசியம் திருத்திக் கொள்வார்கள். ஆனால், இதில் இன்னொரு விஷயமிருக்கிறது. ஏதாவது ஒரு புதிய விஷயமோ, அல்லது, இன்பமோ மனிதருக்கு நேர்ப்படுமானால், சிலர் அவசரப்படாமல் நன்றாக ஆராய்ந்து அந்தப் புதிய விஷயத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு அடிமையாய்ப் போய் அதனினின்றும் மீண்டு வரமாட்டாமல் ஆயிசுகால முற்றும் வருந்தித் தவிக்கிறார்கள். வேறு சிலர் சிறிது காலத்தில் புதிய பிரமையை விலக்கிக் கொண்டு பழைய வழிக்கே வருகிறார்கள். இப்போது நாம் சாதாரணமாக ஒரு குடிகாரனை எடுத்துக் கொள்வோம். ஆரம்பத்தில் அவனுக்கு அந்த நடத்தைதான் சிறந்ததாகத் தோன்றும். குடிப்பதுதான் தேவேந்திர போகம் என்று அவன் நினைப்பான். குடிக்கக்கூடாதென்ற கண்டிப்பை ஏற்படுத்தியிருக்கும் மற்ற அறிவாளிகளை அவன் சுத்த முட்டாள்கள் என்றே மதிப்பான். மற்ற ஒவ்வொருவரும் தன்னைப் போலக் குடித்துப் பார்த்தால் அல்லவா அதன் சுகம் தெரியும் என்றும், அந்த இன்பத்தை அனுபவித்துப் பார்க்காமல் ஜனங்கள் சுத்த ஞானசூனியர்களாய் நடப்பதோடு மற்றவர்களையும் தடுக்கிறார்களே என்றும் நினைப்பான். ஆனால் காலக்கிரமத்தில், அவனுடைய பொருள், தேக ஆரோக்கியம், மானம் முதலிய எல்லாம் அந்தக் குடியினால் அழிந்து போகின்றன. அதன் பிறகு அவன் உண்மையை உணர்ந்து அந்தப் பெரும் பேயின் இடத்தில் இருந்து மீள மாட்டாமல் நடைப்பினமாகக் கிடந்து உழலுகிறான். இங்கிலீஷ் நாகரிகத்தை தான் குடிக்கு உவமானமாகச் சொல்லுகிறேன் என்று நீங்கள் வருத்தப்படக் கூடாது. அதை விட்டு இன்னும் எத்தனையோ உவமானங்கள் சொல்லலாம். ஒரு குழந்தையை எடுத்துக் கொள்வோம். அது தன்னுடைய தாயார் ஊட்டும் சாதத்தை உண்ண மாட்டேன் என்கிறது. கீழே கிடக்கும் மண்ணை எடுத்து நிரம்பவும் ஆனந்தமாகத் தின்கிறது. மற்றவர் அதை எவ்வளவு