பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

221

போஷணைக்கு எது தேவையோ அது எளிதில் வந்து விடுகிறது. அது ஒன்றே போதுமானது. மற்ற மனிதருடைய அன்பாவது உறவாவது இருந்தாலும் இல்லாவிட்டாலும், இரண்டும் ஒன்று தானே. இன்னும் ஆழ யோசித்துப் பார்த்தால், ஒரு ஸ்திரீ ஒரு புருஷனை எதற்காகக் கலியாணம் செய்து கொண்டு அநாவசியமான தொந்தரவை விலைக்கு வாங்க வேண்டும்? புருஷன் இல்லாவிட்டால், நம்முடைய காரியம் எல்லாம் நடைபெறாதா? புருஷனைக் கட்டிக் கொள்ளாமலே தமது வாழ்நாளைக் கழிக்கும் ஸ்திரீகளும், புருஷனைக் கட்டிக்கொண்டு இழந்து தமது வாழ் நாளைக் கடத்தும் ஸ்திரீகளும் உலகத்தில் இல்லையா? அவர்களுக்கெல்லாம் பொழுது போகமாட்டேன் என்கிறதா? இல்லை அல்லவா? நீங்கள் சொல்வது போல, கூடியவரையில் மனிதர் தங்களுடைய தேவைகளையும் செலவுகளையும் குறைத்துக் கொண்டே போவது தான் உத்தமமான காரியம். நம்முடைய தேசத்தில் சந்நியாசம் வாங்கிக் கொள்வதென்று அதைத்தான் சொல்லுகிறார்கள். உலகப்பற்றையும், மனிதர் பற்றையும், உடல் அபிமானத்தையும், உயிர் அபிமானத்தையும் அடியோடு ஒழித்து தமது ஆசாபாசங்களை எல்லாம் அடக்கி, பசி உண்டானால், கையில் அகப்பட்ட காயையோ சருகையோ தின்று பரமாத்மாவோடு ஐக்கியப்படுவது ஒன்றையே நாடி நிற்பது இந்த உலகத்தில் பிறந்தவர் அடையக்கூடிய மகா அரிதான சித்தி என்றும், அதுவே கைவல்ய நிலைமை என்றும், ஜனங்கள் சொல்லிக்கொள்ளுகிறார்கள். அது எல்லோராலும் சாதிக்கக் கூடியதல்ல என்றும் சொல்லக் கேள்வியுற்றிருக்கிறேன். ஆனால் இப்போது உங்களோடு பேசிப் பழகியதில், நம் தேசத்தார் இங்கிலீஷ் பாஷையைப் படித்து, அந்தத் தேசத்து நாகரிகத்தை அறிந்து கொண்டால், அவர்கள் வெகு சுலபத்தில் மேற்படி கைவல்ய நிலைமையை அடைந்து இந்த உலகப்பற்றைத் துறந்துவிடுவார்கள் என்பது நிச்சயம். நம் தேசத்துத் துறவிகள் பூலோகத்தின் பற்றையே ஒழித்துப் பரமபதம் ஒன்றையே நாடிச் செல்கிறார்கள். ஆனால் அந்தப் பரமபதத்தை நாம் பார்க்க முடிகிறதில்லை. பார்த்தவர் திரும்பி வந்து அது எப்படி இருக்கிறதென்று சொன்னதும் இல்லை.