பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

222

இப்போது நம்முடைய வெள்ளைக் காரருடைய சீமை இருக்கிறதல்லவா. அதுதான் நாம் கண் முன் காணக்கூடிய பரமபதமாக இருக்கிறது என்பதைப்பற்றி யாரும் ஆக்ஷேபனை சொல்ல முடியாது. இங்கிலீஷ் படிக்கிறவர்கள் எல்லோரும் ஒருவித துறவிகள். அவர்கள் தம்முடைய இந்தியா தேசத்தையும், இந்திய மனிதருடைய பற்றையும், இந்தியாவில் உள்ள வஸ்துக்களின் பற்றையும், பழக்க வழக்கங்களையும் அடியோடு துறந்து, வெள்ளைக்காரரின் பரமபதத்தில் உள்ள தெய்வங்களின் பாத தூளியாக இருக்கும் பாக்கியம் கிடைத்தாலும் போதும் என்று தபசு பண்ணுகிறார்கள். அவ்விடத்தில் இருந்து வரும் சாமான்கள் எல்லாம் தெய்வப் பிரசாதத்துக்கு சமதையாக இருக்கின்றன. ஆனால் ஒரு விஷயம். இந்த வெற்றிலை பாக்கு மஞ்சள் முதலிய உபயோகமற்ற அற்ப சாமான்கள் எல்லாம் நம்முடைய நாட்டில் தான் விளைகின்றன. இவைகளை உபயோகித்தால் தேக ஆரோக்கியம், சுறுசுறுப்பு, முகக்களை முதலிய குணங்கள் ஏற்படும் என்று நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்து, இவைகளை உபயோகித்து வந்திருக்கிறார்கள். இவைகள் வெள்ளைக்காரரின் சீமைகளில் உற்பத்தியாகிறதில்லை. உற்பத்தியானால் இவற்றின் குணம் அவர்களுக்கும் அவசியம் தெரிந்திருக்கும். அவர்களும் இவைகளை நாம் உபயோக்கிப்பது போலப் பயன்படுத்துவார்களே என்னவோ. ஆனால் அவர்களுடைய ஊரில் ஒரு புட்டி ரூ 20, 25 விலையுள்ள அற்புத சக்தி வாய்ந்த பலவகைப்பட்ட பிராந்திகளும், ஒயின்களும் உற்பத்தி ஆகின்றன. ஐயாயிரம் பதினாயிரம் விலையுள்ள மோட்டார் வண்டிகளும், ஐம்பதினாயிரம் லட்சம் விலையுள்ள ஆகாய விமானங்களும் தயாராகின்றன. அவைகளை எல்லாம் வெள்ளைக்காரர்கள் ஏராளமாக உபயோகப்படுத்துகிறார்கள். நாம் எப்போதும் ஏழ்மை நிலைமையில் இருப்பவர்கள். “உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்” என்ற கொள்கைப்படி நாம் நம்முடைய தேவைகளைச் சுருக்கிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வருமானமோ சொற்பத்திலும் சொற்பமானது. வெள்ளைக் காரர்களோ “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்ற கொள்கைப் படி இந்த உலகம் முழுமையும் கைப்பற்றி சகலமான