பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

225

அடைவான். ஏனென்றால் உங்களால் அவனுக்கு வெற்றிலை பாக்கு மஞ்சள் முதலிய செலவுகள் எல்லாம் மிச்சப்படும். பட்டுப் புடவை ரவிக்கைகள் முதலிய அபாரச் செலவுகள் எல்லாம் இல்லாமல் போகும். நல்ல வேளையாக நான் உங்களை இன்று பார்க்க வந்தேன். இங்கே வந்ததில், சில சங்கதிகளை நான் தெரிந்துகொள்ளச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. மன்னார்குடியில் இருந்து இன்று தான் எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. வருகிற வெள்ளிக்கிழமை நடக்கப் போகும் நிச்சயதார்த்தத்தன்று கந்தசாமி வீட்டார் ஏராளமான வரிசைகளைக் கொண்டுவர உத்தேசித்திருப்பதாக எனக்குச் சங்கதி எட்டி இருக்கிறது. முழுதும் தங்க ஜரிகையும் நற்பவழங்களும் நல்முத்துக்களும் வைத்திழைத்த புடவை, ரவிக்கை, வெற்றிலை இருநூறு கவுளி, பாக்கு 2 மூட்டை, ரஸ்தாளி வாழைப்பழம் ஒருவண்டி, மஞ்சள் ஒரு மூட்டை, குங்குமம் ஒரு மூட்டை முதலிய சாமான்களை எல்லாம் அவர்கள் வரிசையாக வழங்க உத்தேசித்திருக்கிறார்களாம். அவைகள் எல்லாம் உங்களுக்கு உபயோகப்படப் போகிறதில்லை என்று நாங்கள் உடனே எழுதி விடுகிறோம். நிச்சயதார்த்தத்துக்கும், கலியாணத்துக்கும், புடவைக்குப் பதிலாக இரண்டு பீஸ் மஸ்லின் துணி மாத்திரம் வாங்கி வந்தால் அதுவே போதுமானது என்று எழுதித் தெரிவித்து விடுகிறேன். அது தங்களுக்குச் சம்மதந்தானே? நாம் இப்போது இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பிரஸ்தாபம் செய்வதில் எனக்கு இன்னொரு சந்தேகமும் உதிக்கிறது. நம்முடைய தேச வழக்கப்படி கலியாணம் என்றால், அன்றைய தினம் புரோகிதர் வந்து ஹோமம் முதலியவை நடத்தித் திருமாங்கலிய தாரணம் செய்விக்கிறது வழக்கம். அந்த வழக்கம் உங்களுக்குப் பிடிக்காவிட்டால், நாமும் கோவிலில் போய் மோதிரம் மாற்றிக்கொண்டு வருவதுதான் நல்லதாகத் தோன்று கிறது. அந்த விஷயத்திலும் உங்களுடைய அபிப்பிராயத்தை இப்போதே வெளியிட்டு விடுங்கள்” என்றாள்.

அவள் கூறிய வார்த்தைகள் எல்லாம் குத்தலானவை என்பதை மனோன்மணியம்மாள் எளிதில் உணர்ந்தாள் ஆனாலும், கொடி முல்லையம்மாள் வேடிக்கைப் போலப் பேசினாள் ஆதலால், மனோன்மணி அதிக கோபமாவது ஆத்திரமாவது கொள்ளாமல்