பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

மாயா விநோதப் பரதேசி

ஓர் அறைக்குள் வைத்துவிட்டுத் திரும்பிவந்தாள் ஆதலால், அவளைக் கண்ட மனோன்மணியம்மாள், “அடி அமிர்தம்! நீ போய் எனக்குக் கொஞ்சம் காப்பியும் பிஸ்கோத்தும் கொண்டு வா” என்றாள். அமிர்தம் என்றும் பெயருடைய அந்த வேலைக்காரி உடனே அவ்விடத்தை விட்டு வெளியில் போய் மேன்மாடத்தை விட்டுக் கீழே இறங்கி சமையலறைக்குப் போய் ஒரு சிறிய கூஜாவில் காப்பியும், ஒரு தட்டில் ஏழெட்டு பிஸ்கோத்துகளையும் எடுத்துக் கொண்டு மேலே வந்து சேர்ந்தாள். அது வரையில் நிரம்பவும் பொறுமையோடு தன்னை அடக்கிக் கொண்டு அவ்விடத்தில் உட்கார்ந்திருந்த கோபாலசாமிக்கு அதற்கு மேல் அவ்விடத்தில் இருக்கை கொள்ளவில்லை. கந்தசாமியும் மனோன்மணியும் ஒருவர்க்கொருவர் மேன்மேலும் குதர்க்கமாக சம்பாஷித்துக் கொண்டு போகும்படி விடுத்தால் அவர்கள் இருவருக்கும் கலியாணம் நடைபெறாமல் போய் விடுவது நிச்சயம் என்ற நினைவு தோன்றியது. ஆகையால், தான் கந்தசாமியை அழைத்துக் கொண்டு போய்விடுவது உசிதமாகத் தோன்றியது. ஆகவே அவன் கந்தசாமியைப் பார்த்து, “என், நாம் வீட்டுக்குப் போகலாமா? மனோன்மணியம்மாள் பரீட்சைக்கு படிக்கிறபடியால், நாம் அநாவசியமாக அதிக நேரம் இங்கே தங்கி அவர்களுக்கு இடைஞ்சல் செய்வது சரியல்ல. அதனால் நமக்கு யாதொரு அனுகூலமும் இல்லை. ஆனாலும், இவர்களுக்குத் தொந்தரவாக முடியும். இவர்கள் பலகாரம் சாப்பிட்டுவிட்டு வாசிக்கட்டும். முக்கியமாக நாம் கோரிவந்த காரியம் ஆகிவிட்டது. நாம் இதே ஊரில் பார்க்காமல் இருப்பது மரியாதைக் குறைவு என்ற எண்ணத்தினால் நாம் வந்தோம். வந்து பார்த்து சந்தோஷம் அடைந்தோம். இனி கலியாணம் ஆகிவிடுமானால், அதன் பிறகு அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போவோம். அதற்குள் இவர்களுக்குப் பரீட்சையும் தீர்ந்து போயிருக்கும். அதன் பிறகு இருதிறத்தாரும் சாவகாசமாக இருந்து பேசி சந்தோஷம் அடையலாம், மனோன்மணியம்மாளிடம் சொல்லிக் கொண்டு புறப்படு. போகலாம்” என்றான்.

அதைக் கேட்ட மனோன்மணியம்மாள், “என் தகப்பனார் அவருடைய கச்சேரியில் இருக்கிறார். இன்றைய தினம்