பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

மாயா விநோதப் பரதேசி

எல்லாம் கையாண்டு வர வேண்டாமா? அவர்கள் கப்பலிலும் ஆகாய விமானத்திலும் வெகுகாலம் பிரயாணம் செய்ய வேண்டி இருப்பதாலும், நிர்மாநுஷ்யமான தீவாந்தரங்களில் எல்லாம் போய்த் தங்க நேருவதாலும், கெடாமல் நெடுநாளைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் இப்படிப்பட்ட ஈரமற்ற பொருட்களான பிஸ்கோத்து முதலியவைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு அப்படிப்பட்ட சந்தர்ப்பமும் அவசியமும் ஏற்படவில்லை. நாம் புதிய புதிய பதார்த்தங்களை அப்போதைக்கப்போது செய்து ஆரோக்கியமாக உண்கிறோம். இப்படிப்பட்ட பிஸ்கோத்துகள் ஜீரணமாவது கடினம் என்று அவர்கள் பிராந்திகளையும்கூடக் கொண்டு போவார்கள்; அதனால் உடம்பைச் சரிப்படுத்திக் கொள்வார்கள். நாம் பிஸ்கோத்தை மாத்திரம் உண்டு பிராந்தியை விலக்குவதால், நம்முடைய உடம்பு கெட்டுப் போகிறதைத் தவிர நாம் கைகண்டது வேறொன்றும் இல்லை. இந்த பிஸ்கோத்து மாத்திரம் வெகுகாலம் வரும் என்றும், கெடாமல் இருக்கும் என்றும் நாம் சொல்ல முடியுமா? அதற்கும் ஒருகால வரம்புண்டு. அதில் சில மருந்துப் பதார்த்தங்களைச் சேர்த்திருப்பதால், கொஞ்சகாலம் வரையில் அது ஒரு மாதிரியாக இருக்கும். அதன் பிறகு அதுவும் புழுபுழுத்தும் காறல் எடுத்தும் கெட்டுத்தான் போகிறது. இங்கிலிஷ்கார வியாபாரிகள் இதனால் அதிக பணம் வருகிறது என்பதையும், ஜனங்கள் இதை அதிகமாக உபயோகிக்கிறார்கள் என்பதையும் கண்டு, விலை மட்டமான சாமான்களை உபயோகித்து அதிக லாபம் அடைய விரும்புவதே அநேகமாய் மனித சுபாவத்துக்கு ஒத்ததாக இருக்கிறது. முக்கியமாக இதன் விலையை கவனித்தீர்களா? இது உயர்ந்த தினுசு பிஸ்கோத்தல்லவா? ஒரு பவுண்டின் விலை ரூ. 1-8-க்குக் குறையாது. இதற்கு அரைக்கால்படி கோதுமை மா பிடித்திருக்கும். மற்ற சர்க்கரை, வெண்ணெய் முதலியவற்றின் செலவும் சேர்ந்து இரண்டனா கூடப்பிடித்திருக்காது. அதற்கு விலை ரூ.1-8-0 வைத்திருக்கிறார்கள். இது எவ்வளவு நாணயம் பார்த்தீர்களா? இதை நாம் ஏன் வாங்கி ஏமாற வேண்டும்: இம்மாதிரி அவர்கள் எத்தனையோ அற்ப சாமான்களை எல்லாம்,