பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

253

ஏற்படாது. அவர்கள் வீட்டில் ஒரு கோடீசுவரருடைய பெண் மூத்த மருமகளாக வந்து இருக்கிறார்கள். அவள் இரவு பகல் சலிக்காமல் உழைத்து வேலை செய்கிறவள். அவளோடு கூட நீங்களும் உழைத்து வேலை செய்ய நேருமே அன்றி, நீங்கள் எஜமானத்துவம் வகித்து சும்மா உட்கார்ந்திருப்பது பார்ப்பதற்கே விகாரமாக இருக்குமே. நீங்கள் அவர்கள் சாப்பிடுகிற பழைய அமுது முதலிய ஆகாரங்களை எல்லாம் சாப்பிட வேண்டி வரும். அதற்கெல்லாம் உங்கள் மனம் இடம் தருமா? உங்களுடைய இங்கிலீஷ் பட்டத்தையும், இங்கிலீஷ் பழக்கவழக்கங்களையும் வைத்துக் கொண்டு நீங்கள் உங்கள் புருஷர் சந்தோஷப்படும்படி எப்படி நடந்துகொள்ளப் போகிறீர்கள் என்பது மற்ற சந்தேகங்களைவிடப் பெரிய சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை நாங்கள் கந்தசாமியிடம் பகைமை கொண்டவர்கள் ஆகையால், இப்படிப் பட்ட ஆட்சேபனைகளை எல்லாம் கிளப்பிவிட்டு உங்களை பயமுறுத்தி இந்தக் கலியாணம் நடைப்பெறாமல் செய்துவிட வேண்டும் என்ற கருத்தோடு வந்திருக்கிறோம் என்று நீங்கள் எண்ண வேண்டாம். அவனுடைய குணங்களும், மனப்போக்கும் எனக்குத் தெரியும் ஆகையால், பின்னால் காரியங்கள் இப்படித்தான் நடக்கும் என்பது எனக்கு நிச்சயமாகத் தோன்றுகிறதைப் பற்றி, இவைகளை எல்லாம் நான் சொல்லுகிறேன். ஏனென்றால், கலியானம் என்பது வெள்ளைக்காரர் நினைப்பது போல அற்ப சொற்பமானதல்ல. அவர்கள் இன்று கலியாணம் செய்து கொள்ளுவார்கள்; நாளைய தினம் அதை ரத்து செய்து வேறு கலியானம் செய்து கொள்ளுவார்கள். நாம் அப்படிச் செய்ய முடியாது. முடிச்சு விழுந்தால், கடைசி வரையில் அதை அவிழ்க்கக் கூடியவர் எவரும் இல்லை. ஆயிசு காலம் முடிய ஸ்திரி புருஷரை சந்தோஷப்படுத்துவதும் இந்தக் கலியானந்தான்; விசனத்தில் ஆழ்த்துவதும் இந்தக் கலியாணம்தான். ஆகையால், இதை ஆய்ந்தோய்ந்து சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு செய்வதே சர்வ சிலாக்கியமான காரியம். ஆகையால்தான் நான் துணிந்து என் மனசை வெளியிட்டேன். இது போலவே நீங்களும் உங்கள் மனசை வெளியிடும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்” என்றாள்.