பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

259

மனதில் பெருகி அவனை வதைக்கத் தொடங்கின. அவர்களே தங்களது வரலாற்றைக் கேட்டறிந்து கொண்டு தங்களை அனுப்பி விடுவார்கள் என்று நினைத்ததற்கு மாறாக அவர்கள் போலீசாரிடம் தங்களை ஒப்புவிக்கத் தீர்மானித்ததை நினைக்க நினைக்க, கந்தசாமியின் மனம் விவரிக்க இயலாதபடி தத்தளித்தது. போலீசார் வந்து கோபாலசாமியை விசாரித்தால், அவன் தங்களுக்கு அவமானம் ஏற்படாதபடி ஏதேனும் யுக்தி செய்வான் என்ற ஒரு தைரியமும் தோன்றியது ஆனாலும், எந்த நேரத்தில் தமக்கு எவ்விதமான இழிவு ஏற்படுமோ என்ற நினைவையே பிரதானமாகக் கொண்டு கவலையும் துயரமுமே வடிவெடுத்தது போல, அவன் ஒரு சோபாவின் மீது உட்கார்ந்து அப்படியே சாய்ந்துவிட்டான்.

அதன் பிறகு வெகு நேரம் கழிந்தது. எவரும் வந்து அந்த அறையின் கதவைத் திறக்கவே இல்லை. அஸ்தமன வேளையும் கடந்து, இரவிற்கு அறிகுறியான மங்கலான பிரகாசமும் இருளும் அந்த அறையில் சூழ்ந்து கொள்ளலாயின. அந்த அறையில் மின்சார விளக்கு இருந்ததை அவன் கண்டான் ஆதலால், அவன் எழுந்து ஒரு விளக்கைக் கொளுத்திவிட்டு, அதே சோபாவில் மறுபடி உட்கார்ந்து சாய்ந்தபடி சஞ்சலக் கடலில் ஆழ்ந்திருந்தான். இரவு மணி எட்டடித்தது. அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. ஒரு வேலைக்காரன் உள்ளே வந்து, “அம்மா! உனக்குச் சாப்பாடு அனுப்பி இருக்கிறார்கள். சாப்பிட்டுவிட்டு இங்கேயே படுத்துக்கொள். போலீசார் விசாரித்ததில் உன் புருஷர் இன்னும் நிஜத்தைச் சொல்லவில்லை. பொழுது விடிவதற்குள் அவர் உண்மையைச் சொல்லாவிட்டால் அதன் பிறகு அவர்கள் உங்களை ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போய் சிறையில் அடைக்கப் போகிறார்களாம். அது வரையில் நீயும் இங்கேயே இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு ஆகாரம் தண்ணிர் முதலியவற்றைக் கீழே வைத்துவிட்டு அறையின் கதவை மூடி வெளியில் தாளிட்டுக் கொண்டு போய்விட்டான். கோபாலசாமி அதுவரையில் போலீசாரிடம் உண்மையை வெளியிடாது இருந்தது ஒரு விதத்தில் நல்லதாகத் தோன்றினாலும், அவன் வேறு எவ்விதத்தில் தன்னைத் தப்புவிக்கப் போகிறான் என்ற