பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

மாயா விநோதப் பரதேசி

கவலை தோன்றி வதைக்கத் தொடங்கியது. அவன் சோபாவில் சாய்ந்து சிந்தனை செய்தபடியே நெடு நேரம் இருந்து அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான். அவனுக்காக வைக்கப்பட்ட ஆகாரம் தண்ணிர் முதலியவை கையாலும் தொடப்படாமல் அப்படியே இருந்தன.

இரவு மணி பன்னிரண்டு இருக்கலாம். கந்தசாமி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிக் கிடந்தான். தடதடவென்ற ஒரு பெருத்த ஒசை உண்டாயிற்று, அவன் இருந்த அறையின் கதவுகள் படேரென்று தரையில் விழுந்தன. கந்தசாமி திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். தான் இருந்தது இன்ன இடம் என்ற உணர்வுகூட அவனுக்குச் சரியாக உண்டாகவில்லை. அவன் தூக்கக் கலக்கத்தில் தனது கண்களைத் திறந்து பார்க்க, நிரம்பவும் விகாரமாக இருந்த நாலைந்து முரட்டு மனிதர்கள் கையில் கத்தி துப்பாக்கி முதலிய பயங்கரமான ஆயுதங்களோடு அந்த அறைக்குள் வந்திருப்பதாக அவன் உணர்ந்து, அது கனவோ உண்மையோ என்று சந்தேகித்தவனாய் அசையாது அப்படியே கண்களை மூடிப்படுத்திருந்தான். அவ்வாறு வந்த முரடர்களுக்கெல்லாம் முன்பாக வந்த நமது இடும்பன் சேர்வைகாரன் மற்றவர்களைப் பார்த்து, “மனோன்மணியம்மாள் அதோ இருக்கிறாள். அவள் விழித்துக் கொண்டு கூச்சலிட்டாலும் பாதகமில்லை. கீழே இருப்பவர்கள் எல்லாம் அப்படி இப்படி அசைய முடியாமலும் கூச்சலிட முடியாமலும் கட்டிப் போட்டிருக்கிறோம். சிசாவைப் பெண்ணின் மூக்கில் பிடியுங்கள்” என்றான்.

அந்தப் பயங்கரமான சொற்களைக் கேட்ட கந்தசாமி ஸ்தம்பித்து இன்னது செய்வதென்பதை உணராதவனாய் அப்படியே இருக்க, அடுத்த நிமிஷம் இரண்டு மூன்று முரடர்கள் அவனுக்கருகில் வந்து அவனை இறுகப் பிடித்துக் கொண்டு குளோரபாரம் என்ற மயக்கம் உண்டாக்கும் மருந்திருந்த ஒரு சீசாவைக் கந்தசாமியின் மூக்கிற்கருகில் பிடிக்க, சிறிது நேரத்தில் கந்தசாமி ஸ்மரணை தப்பிப் பிணம் போலச் சாய்ந்து விட்டான்.