பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

மாயா விநோதப் பரதேசி

அத்தகைய தருணத்தில் நமது கண்ணப்பாவும், அவளது மனையாட்டியான வடிவாம்பாளும் அவ்விடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் கலங்கிய மனதும், கண்ணீர் சொரிந்த வதனமும், பதறிய அங்கமும், மார்பில் வைத்த கரங்களும், அவிழ்ந்து அலங்கோலமாகத் தொங்கிய கேசமும் உடையவர்களாய் ஒட்டமும் நடையுமாக அவ்விடத்திற்கு ஓடி வந்து சேரவே, கண்ணப்பாவின் அடையாளத்தைக் கண்டு கொண்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜனங்களை வேண்டி வழிவிடும்படி செய்து அவர்கள் இருவரை மாத்திரம் உள்ளே அனுப்ப முயற்சி செய்தார். அவரிடம் மிகுந்த நன்றி செலுத்திய கண்ணப்பா, “ஐயா! சுவாமியாருடைய நிலைமை இப்போது எப்படி இருக்கிறது? அவர் பிழைத்துக் கொள்வாரா? அவரோடு கூட யார் யார் இருக்கிறார்கள்? யாராவது தக்க வைத்தியர், மாந்திரீகர்கள் வந்து சிகிச்சை செய்கிறார்களா?” என்று விநயமாகக் கேட்க, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், “ஐயா! இப்போது நாம் எந்த விஷயத்தையும் நிச்சயமாகச் சொல்லமுடியாது. அவர் பிழைத்தால், புனர் ஜென்மம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பாம்பு கடித்தாலே மனிதன் உடனே மாண்டு போய் விடுவதை நாம் பார்த்திருக்கிறோம். நான்கு சிறிய கருநாகங்கள் ஒரு மனிதரைக் கடித்தால், அவருடைய கதி என்ன ஆகும் என்பதை நாமே யூகித்துக் கொள்ள வேண்டியதுதான். அவர் கண்களைத் திறக்காமல் அப்படியே கட்டை போலப் படுத்திருக்கிறார். வைத்தியம் மாந்திரீகம் எல்லாம் நடக்கின்றன. முடிவு எப்படி இருக்குமோ தெரியவில்லை” என்றார்.

கண்ணப்பா கவலையும் கலக்கமுமே வடிவமாக மாறிப் போய், “ஐயா! இப்போது தக்க வைத்தியர் யாராவது உள்ளே இருக்கிறாரா?” என்றான்.

சப் இன்ஸ்பெக்டர், “நம்முடைய இங்கிலீஷ் வைத்தியர் புஜங்கராவ் நாயுடு இருக்கிறார். அவர் நல்ல திறமைசாலி. அவருடைய வைத்தியத்தில், சாமியார் பிழைத்தால் உண்டு. மற்றவரால் ஒன்றும் சாயாதென்று நினைக்கிறேன்” என்றார்.

அதைக் கேட்ட பக்கத்தில் இருந்த பலர் ஒரே காலத்தில் பேசத் தொடங்கி பற்பல அபிப்பிராயங்களையும் ஷராக்களையும்