பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

273

காப்பாற்ற வேண்டும். அவர் இதுவரையில் செய்துள்ள புண்ணியம் அபாரமானது. அதுவாவது அவரைக் காக்காதா பார்க்கலாம். அவருடைய உயிருக்கு ஏதாவது ஹானி நேர்ந்து விடுமானால், முக்கியமாக எங்கள் இலாகாவுக்கே அசாத்தியமான நஷ்டமும் அசெளகரியங்களும் ஏற்படும். போலீஸ் இலாகாவிற்கே ஒரு சிரோரத்னம் போல விளங்கி வரும் இந்த மகான் போய் விட்டால், எங்கள் இலாகாவின் பெயரும் கீர்த்தியும் பெருமையும் அமாவாசையின் இரவு போல இருளடைந்து மங்கிப் போவது நிச்சயம். சட்டைநாத பிள்ளையாகிய பரமதுஷ்டன் சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடிவந்திருக்கிறான், அவனைக் கண்டுபிடிப்பது முதலிய அரிய காரியங்களை முடிக்க வேண்டிய இந்த மகா இக்கட்டான வேளையில் இவர் போய்விடுவாரானால், எங்கள் பாடுதான் திண்டாட்டமாகிவிடும். நீங்கள் சீக்கிரம் உள்ளே போய், எப்படியாவது பாடுபட்டு சுவாமியாரைப் பிழைக்கச் செய்யுங்கள். போங்கள்” என்று நிரம்பவும் உருக்கமாகக் கூறினான்.

அவனது சொற்களைக் கேட்ட உடனே கண்ணப்பா வடிவாம்பாள் ஆகிய இருவரது மனமும் கண்களும் நிரம்பவும் கலங்கின. அவர்கள் இருவரும் அதற்கு மேலும் அவ்விடத்தில் நின்று காலஹரணம் செய்ய சகியாதவராய் அவ்விடத்தை விட்டு உள்ளே நுழைந்து பல தாழ்வாரங்களையும் அறைகளையும் கூடத்தையும் கடந்து விரைவாக நடந்து திகம்பர சாமியாரினது ரகசிய விடுதியின் வாசலை அடைந்தனர். எங்கும் நிசப்தமே மயமாக நிறைந்திருந்தது. இடைவழி முழுதும் நிர்மாதுஷ்யமாகக் காணப்பட்டது. அந்த நிலைமை பின்னால் நேரப்போகும் விபரீதமான சம்பவத்திற்கு முன்னறிகுறியோ என்ற நினைவே அவ்விருவரது மனதிலும் தோன்றித் தோன்றி மறைந்தது ஆனாலும், அத்தகைய அசுபமான நினைவை அவர்கள் தங்களது மனதைவிட்டு விலக்க முயன்று கொண்டே செல்ல, திகம்பரசாமியாரது அந்தரங்க விடுதியான வாசலில் துயரமே வடிவாகத் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அவரது வேலைக்காரி அவர்களது திருஷ்டியில் பட்டனள். அவளது பரிதாபகரமான தோற்றத்தைக் கண்டவுடனே

மா. வி. ப.I- 19