பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

279

மனம் இடங்கொடுக்காமல், ஆவல் கொண்டு பதறியது ஆதலால், தாம் அவரோடு பேச்சுக் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் சைகை செய்து கொண்டனர். உடனே கண்ணப்பா தணிவான குரலில் பேசத்தொடங்கி, “சுவாமீ. சுவாமீ உடம்பு எப்படி இருக்கிறது?” என்று நிரம்பவும் மிருதுவாக வினவினான். அந்த வார்த்தைகளைக் கேட்ட திகம்பரசாமியார் தமது கண்களை மெதுவாக திறந்து பார்த்து, கண்ணப்பாவும் வடிவாம்பாளும் வந்திருப்பதை உணர்ந்து உடனே தமது பார்வையை நாற்புறங்களிலும் செலுத்திக் கதவுகளைக் கவனித்தார். பிறகு அவர் தமது முழு வாத்சல்யமும் முகத்தில் தோன்ற, அவர்களை நோக்கி, “வாருங்கள் தம்பி வா குழந்தை! இப்படி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள் தம்பி” என்று கூற, உடனே கண்ணப்பா அவருக்கருகில் போடப் பட்டிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். வடிவாம் பாள் அவனுக்குப் பின்னால் போய் நாணிக்குனிந்து நின்ற வண்ணம் பேசத் தொடங்கி, “சுவாமிகளே உடம்பு இப்போது என்ன செய்கிறது? விஷம் குறைந்து கொண்டு வருகிறதா? எங்கே வைத்தியர்கள் ஒருவர்கூட இல்லையே? எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்?” என்று நிரம்பவும் உருக்கமான குரலில் கூறினாள்.

அதைக் கேட்ட சுவாமியார் தணிவாக ஹீனக் குரலில் பேசத் தொடங்கி, “குழந்தாய்! மனிதருடைய உடம்பு என்றைக்காவது ஒரு தினம் இறந்துபோகக் கூடியதே அன்றி, எப்போதும் நிலைத்து நிற்கக் கூடியதல்லவே. மனித ஜென்மம் நம்முடைய அனுமதி இல்லாமல் தானாக உண்டாகிறது; கொஞ்ச காலத்தில் நாம் எதிர்பார்க்காத போது தானாகவே அது போய்விடுகிறது. மாயமாகிய திரைக்கு மறைவில் எவனோ ஒருவன் இருந்து கொண்டு தன்னுடைய ஆக்ஞையாகிய ஒரு சக்தியால் மனிதன் உற்பத்தியாகும்படி செய்கிறான். “நான் நான்” என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொரு மனிதரும், இந்த உலகத்தில் பிறக்கும் முன் எங்கே இருந்தார்கள்! தாய் வயிற்றில் எப்படிப் புகுந்து, யாருடைய தயவினால் பத்துமாத காலம் இருந்து வளர்ந்து, பிறகு