பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

293

மனிதர் என்ன சம்பந்தம் என்பதையும், கடவுளுக்கும் மனிதருக்கும் மற்ற சிருஷ்டிப் பொருள்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும், மனிதர் சாசுவதமாக எதை நாட வேண்டும் என்பதையும், இம்மையில் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அந்தப் பிரதிநிதி எல்லோரது மனசும் திருப்தி அடைந்து நம்பும்படி நிரூபிக்க வேண்டும். அப்போது தான் மனிதர் எல்லோரும் திருந்தி நல்வழிப்பட்டு வேற்றுமையை விட்டு ஒற்றுமையைக் கடைப்பிடித்து உண்மையான வழியைப்பற்றி நடப்பார்கள். உலகில் சாசுவதமான கூேடிமமும் அமைதியும் நிலைபெற்று நிற்கும். அதை விட்டு என்னைப் போன்ற அற்ப சக்தியுள்ள மனிதன் இவ்வளவு பெரிய உலகில் துஷ்டநிக்கிரகம் சிஷ்டபரிபாலனம் செய்வ தென்றால் அது சாத்தியமாகுமா? காமம் குரோதம் முதலிய மும்மலங்களும் மனிதனிடம் வேரூன்றி இருக்கையில் எத்தனையோ சட்டைநாத பிள்ளைகளும், சர்வோத்தம சர்மாக்களும் தோன்றிக் கொண்டே தான் இருப்பார்கள். ஒவ்வொருவரையும் வெல்வதற்கு ஒவ்வொரு திகம்பரசாமியார் தோன்றிக் கொண்டே இருக்க, வேண்டும் என்றால், அதற்கு எல்லையே இராது. இது வெள்ளைக்காரருடைய வைத்தியத்தைப் போல இருக்கிறதே அன்றி வேறல்ல. மனிதனுடைய இரத்தம் கெட்டுப் போய் உடம்பில் கட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாய்ப் பல இடங்களில் தோன்றிக் கொண்டே இருந்தால், அவர்கள் ஒவ்வொன்றையும் கத்தியால் அறுத்து சத்திரம் வைத்துக் கொண்டே போவார்களன்றி, மூலகாரணமாகிய அதன் இரத்தத்தைச் சுத்தி செய்ய மருந்து கொடுத்தால், எந்த இடத்திலும் கட்டியே உண்டாகாது என்று அவர்கள் எண்ணுவதில்லை. சென்ற மாசம் ஒன்றரை வயசுக் குழந்தை ஒன்றுக்கு அப்படித்தான் சூட்டினால் கட்டிகள் வந்து கொண்டிருந்தன. அந்தக் குழந்தையின் உடம்பில் அந்த இங்கிலிஷ் வைத்தியர் 27-இடங்களில் சத்திரம் வைத்ததாகக் கேள்வியுற்றேன். இந்த வைத்தியத்தைப் போலத்தான் இருக்கிறது என்னைப் போன்றவர்கள் துஷ்ட நிக்கிரகம் செய்ய எண்ணுவது. ஆகவே, நான் இறக்கப் போவதைக் குறித்து நீங்கள் விசனித்து வருந்துவதை விட்டு, கடவுளைத் தியானித்து, இந்த உலக சிருஷ்டியின் உண்மையை ஜனங்களுக்குத் தெரிவித்து எல்லோரையும் சன்மார்க்கத்தில் திருப்பக்கூடிய ஒரு பிரதிநிதியை