பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

மாயா விநோதப் பரதேசி

அவனது சொற்களைக் கேட்ட திகம்பரசாமியாரது முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. அவர் மெதுவாக எழுந்து பக்கத்தில் கிடந்த திண்டின்மேல் சாய்ந்து கொண்டவராய், “தம்பி என் பொருட்டு நீங்கள் எல்லோரும் இறந்து விடுவீர்கள் என்று நீங்கள் சொல்வதில் இருந்து நீங்கள் எல்லோரும் என்மேல் வைத்திருக்கும் வாஞ்சையும் மதிப்பும் எவ்வளவு என்பது நன்றாகத் தெரிகிறது. நீங்கள் எல்லோரும் என்னை உங்களுடைய உயிரைவிட சிரேஷ்டமாக எண்ணுகிறீர்கள் என்பதும் தெரிகிறது. இப்படிப்பட்ட அரிய நண்பர்களின் அன்பு ததும்பிய சொற்களைக் கேட்கும்போதே எனக்கு நூறு யானையின் பலம் உண்டாகி விட்டது போல நான் உணருகிறேன். பாம்பு விஷத்துக்கு மருந்து போட்டதைவிட அதிகமான குணம் ஏற்கனவேயே உண்டாகி விட்டது. இது வரையில் எழுந்து உட்கார முடியாமல் மயங்கிப் படுத்திருந்த என்னை உங்களுடைய அனுதாபச் சொற்கள் எழுப்பி உட்கார வைத்து விட்டன. இனி எனக்கு மருந்தே தேவையில்லை. நான் முடிவில் பிழைத்துக் கொள்வேன் என்பது நிச்சயமானாலும், நான் கொஞ்ச காலம் இறந்துபோய், அதன் சுகம் எப்படி இருக்கிற தென்று பார்க்கத் தீர்மானித்திருக்கிறேன்” என்றார்.

அவர் கூறிய சொற்களைக் கேட்ட மற்ற இருவரும் மிகுந்த குழப்பமும் திகைப்பும் அடைந்தனர். படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்ததைக் காண, அவர்கள் இருவரது மனதிலும் அவர் பிழைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையும் சந்தோஷமும் உண்டாயின. ஆனாலும், அவர் கூறிய வார்த்தைகளின் கருத்து நன்றாகத் தெளிவுபடவில்லை. ஆகவே கண்ணப்பா மறுபடி பேசத்தொடங்கி, “சுவாமிகளே! தங்களுடைய கருத்து அவ்வளவு நன்றாக விளங்கவில்லை. தாங்கள் கொஞ்ச காலத்துக்கு இறந்திருப்பதாவது, அதன் பிறகு பிழைக்கிறதாவது, நாங்கள் சொன்ன அனுதாப மொழி தங்களுடைய விஷத்தை நிவர்த்திப்ப தாவது; எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை. தயைசெய்து தங்களுடைய கருத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்” என்றான்.

சாமியார், “என் கருத்தை நான் விளக்குவது இருக்கட்டும். ஊரில் உள்ள ஜனங்கள் என்னைப் பாம்புகள் கடித்த வரலாற்றை