பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

மாயா விநோதப் பரதேசி

கண்ணப்பா:- (முன்னிலும் அதிக வியப்பும் ஆவலும் அடைந்து) இந்த பங்களாவில் தப்பித்தவறி பாம்பு வந்தால் ஒரு பாம்பு தான் வரும். பல பாம்புகள் ஒன்றாக எப்படி வரும்? பாம்புப் புற்றை ஒருவேளை யாராவது வெட்டினார்களா? அங்கே தாங்கள் போனிகளா?

சாமியார்:- நன்றாக இருக்கிறது. யாராவது போய்ப் பாம்புப் புற்றை வெட்டுவார்களா? அப்படியே தெரியாமல் யாராவது வெட்டினாலும், அங்கே நான் ஏன் போகப் போகிறேன்? அதெல்லாம் இல்லை. நீங்களே இன்னம் நன்றாக யோசித்துப் பாருங்கள். நாலைந்து பாம்புகள் எப்படி ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கும் என்று யோசனை செய்யுங்கள்.

கண்ணப்பா:- (சிறிது நேரம் யோசனை செய்து) ஒரு வேளை யாராவது பாம்பாட்டி நாலைந்து பாம்புகளை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்க வந்தானா? அவனிடம் இருந்த பாம்புகள் எல்லாம் ஒரு வேளை தப்பி ஓடிவந்து தங்கள் மேல் விழுந்திருக்குமோ?

சாமியார்:- (சிரித்துக் கொண்டு) அதெல்லாம் இல்லை. பாம்பாட்டி பாம்புகளின் விஷப்பல்லை அறுத்து அந்த இடத்தை நெருப்பால் தீய்த்த பிறகு தானே அதை எடுத்துக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு ஆட்டுகிறான். அவைகள் கடித்தாலும் விஷமில்லை. அதைப்பற்றி நான் பயப்படக் கூடியவன் அல்லவே.

கண்ணப்பா:- (முற்றிலும் குழப்பமும் பிரமிப்பும் அடைந்து) அதுவுமில்லை என்றால், பிறகு வேறு எந்தவிதமாகத்தான் தங்களுக்கு இந்த அபாயம் நேர்ந்தது? தாங்களே சொல்லி விடுங்கள். எனக்கு வேறே எதுவும் தோன்றவில்லை.

சாமியார்:- நம்முடைய விரோதிகள் நம்மேல் பாணந்தொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அன்றைய தினம் சட்டைநாத பிள்ளை சிறைச்சாலையில் இருந்து தப்பி வந்துவிட்டதாக, நான் உங்களிடம் சொன்ன காலத்தில், நாம் எல்லோரும் இனி நிரம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொன்னேன் அல்லவா. நான் எதிர்பார்த்தபடிதான் அவர்கள் செய்ய ஆரம்பித்து, முதல் பாணத்தை என்மேல் தொடுத்திருக்கிறார்கள். நல்ல வேளையாக தெய்வந்தான் என்னைக் காப்பாற்றியது.