பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

மாயா விநோதப் பரதேசி

பிரதேசமாகிய சூதான் சஹாரா பாலைவனத்தைத் தான் நம்மவர்கள் எமனுடைய பட்டணமாகிய வைவசுத பட்டணம் என்று மதித்தார்கள் என்று நீ சொல்லுவாய் போல் இருக்கிறதே.

கந்தசாமி:- (புன்னகையோடு) ஆம்; அதை நான் சொல்ல வாயெடுக்கும் முன் அது உன் மனசிலும் பட்டுவிட்டது. அப்படி நினைப்பதற்கு இன்னொரு விஷயங்கூடப் பொருத்தமாக இருக்கிறதை நீ கவனித்தாயா? அந்த சூதான் சஹாரா பாலைவனத்துக்குப் போகும் வழியில், முதலைகளே நிறைந்ததும், இப்போது நீலநதி என்று சொல்லப்படுவதுமான பயங்கரமான பெரிய ஆற்றைத்தான், எமலோகத்துக்குப் போகும் வழியில் உள்ள வைதரணிநதி என்று சொல்லி இருக்கலாம்.

கோபாலசாமி:- (சிரித்துக் கொண்டு) பேஷ்! பேஷ்! நீ சொல்லும் வியாக்கியானம் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. நம்முடைய நாட்டு வைதிகர்களிடம் போய் நீ இப்படி எல்லாம் சொல்வாயானால், அவர்கள் உன்னை உடனே பைத்தியக்கார வைத்திய சாலைக்கு அனுப்பினாலும் அனுப்பிவிடுவார்கள். ஆனால், நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று சொல்லுகிறபடி அவர்கள் கோபித்தாலும், நீ சொல்லும் விஷயம் என்னவோ பொருத்தமாகத்தான் இருக்கிறது. அது போகட்டும்; நாம் புராண விஷயங்களைப் பற்றிப்பேச எடுத்துக் கொண்டால், நம்முடைய சந்தேகங்கள் அதிகரிக்கும் அன்றி தெளிவுபடப் போகிறதில்லை. நாம் முதலில் பேச ஆரம்பித்த விஷயத்தை விட்டு, வெகுதூரம் போய் இமாலயம், ஜெர்மனி, ஆப்பிரிக்கா, எமலோகம் முதலிய துரப்பிரதேசங்களுக்கு எல்லாம் போய் அலைந்து கொண்டிருக்கிறோம். வீட்டைவிட்டு வெளியில் வர அஞ்சும் மிருதுவான சுபாவமுடைய நம்முடைய பெண் மக்களை எல்லாம் இப்படிப்பட்ட பயங்கரமான தனித்த இடத்தில் கொண்டு வந்து வைத்துக்கொண்டுதானா இவர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற விஷயத்தை அல்லவா நாம் பேசினோம். வெள்ளைக்காரர்கள் நம்முடைய தேவர்கள் ஆகையால், அவர்கள் சர்வக்ஞர் என்றும், ஏதோ ஆழ்ந்த கருத்தோடு தான் இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பார்கள் என்றும்