பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

21

ஆனாலும், இந்த உலகம் எத்தனையோ யுகம் யுகமாய் இருந்து வந்திருக்கிறது. நாமோ இப்போது பிறந்திருக்கிறோம். நமக்கு முன் பிறந்து இறந்தவர்கள் எல்லாம் நிலங்களையும் வீடுகளையும் அபகரித்துத் தம் தமக்குச் சொந்தமென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போல ஏழைகளெல்லாம் பிறந்து கொண்டே போகிறார்கள். எங்களுக்குப் பசி என்பது மாத்திரம் இல்லாதிருந்தால், நாங்களும் உன்னைப் போல வேதாந்தம் பேசத்தான் பேசுவோம்; வெள்ளியையும் பொன்னையும் உதைத்துத் தள்ளுவோம். ஓயாமல் வயிறு பசித்துக் கொண்டு, எதையாவது உள்ளே போடு போடு என்று உள்ளே இருந்து கிள்ளிக்கொண்டே இருக்கிறது. உங்களுடைய வீட்டில் இந்த வருஷத்தில் விளைந்து வந்த ஐயாயிரக்கல நெல்லைக் களஞ்சியங்களில் போட்டு வைத்திருக்கிறீர்களே. அதில் நான் ஒருபடி நெல் எடுத்து என் பசியை ஆற்றிக் கொள்ள எனக்கு அதிகாரம் உண்டா? அப்படி நான் செய்தால், என்னை நீங்கள் சும்மா விடுவீர்களா? இவ்வளவு தூரம் வேதாந்தம் பேசும் நீ “கடவுளுடைய சிருஷ்டியாகிய இவனுடைய வயிறு பசியாகிய அவஸ்தையினால் வருந்துகிறது. கடவுளுடைய சிருஷ்டியாகிய நெல் எங்கிருந்தால் என்ன? இந்த வயிறு அதை எடுத்துச் சாப்பிட்டுத் தனது பாதையைத் தீர்த்துக் கொள்ளட்டும்” என்று நீ சொல்லிவிட்டுப் பேசாமல் இருப்பாயா? இருக்கவே மாட்டாய். ஏதோ சிநேகிதனாயிற்றே என்று நீ ஒருதரம் பொறுப்பாய்; பல தடவைகள் பொறுப்பாய். நான் ஓயாமல் அப்படியே செய்து கொண்டு போனால், நீ என்ன செய்வாய் தெரியுமா? “ஏதடா இவன் பெரிய திருடனாய் இருக்கிறான். இப்படிப்பட்ட அயோக்கியனோடு நாம் சிநேகம் வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல” என்று நினைத்து, நீ அதன் பிறகு என்னோடு பேசமாட்டாய்; என்னுடைய சிநேகிதத்தையும் விட்டுவிடுவாய். நீ மாத்திரமல்ல; உலகத்தில் உள்ள சகலமான மனிதரும் இப்படித் தான் செய்வார்கள். உலகத்தை எல்லாம் துறந்த ஒரு சந்நியாசியை எடுத்துக் கொள்வோம். அவருடைய கையில் ஒரு திருவோடும், இடுப்பில் ஒரு கோவணமும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் படுத்துக் கொண்டிருக்கும் போது,