பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மாயா விநோதப் பரதேசி

உத்தியோகம் பெற்று இந்த ஊருக்கு வந்திருக்கிறார். வந்தவர் உங்கள் ஊரில் உள்ள மற்ற எல்லோரையும் மறந்து, உங்கள், குடும்பத்தை மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்து, அவருடைய ஒரே பெண்ணை உனக்குக் கொடுப்பதாக உன் தகப்பனாருக்குக் கடிதம் எழுத வேண்டிய காரணம் என்ன? அந்த ஊரில் உள்ள எல்லோரையும்விட நீ அதிகப் பணக்காரனாயும், அதிக நிலம் உள்ளவனாகவும் இருப்பதனால் அல்லவா? ஆகையால், பணம் அதிகப்பட அதிகப்பட கெளரதையும் மரியாதையும் பெரிய மனிதர்களுடைய சம்பந்தமும் அதிகரிக்கின்றன. இதை அறிந்து தான், நம்முடைய திருவள்ளுவர் அருளிலார்க்கு அவ்வுலகமில்லை என்றும், பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை என்றும் சொன்னார். இப்படியெல்லாம் நான் சொல்லுவதில் இருந்து, நான் உன்னுடைய செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டு இப்படிப் பேசுகிறேன் என்று நினைக்காதே. நான் சொன்னது உன்னைப் பற்றியதல்ல; உலக நியாயம் அப்படி இருக்கிறது என்று உன்னை ஒர் உதாரணமாக வைத்துச் சொன்னேன். அது போகட்டும். உலகத்துக் கோணலை அதைப் படைத்த சர்வ வல்லமையுள்ள கடவுளே திருத்த முடியவில்லை. நாம் அதைத் திருத்துவது ஒருநாளும் சாத்தியப்படாது. இத்தனை பெரிய சூரிய சந்திர மண்டலங்களை எல்லாம் படைத்த எல்லாம் வல்ல கடவுள் அற்பர்களான இந்த மனிதர்களுடைய மனக்குணக்கையும், அகங்காரத்தையும், காமம், குரோதம் முதலிய கெடுதல்களையும் இல்லாமல் சிருஷ்டிக்க முடியாமல் போய் விட்டதைப் பற்றித்தான் நான் ஆச்சரியமடைகிறேன். ஆனாலும் ஒரு விஷயம் என் மனசில் நிரம்பவும் திருப்தியையும் சந்தோஷத்தையும் உண்டாக்குகிறது. கோடீசுவரனாகிய நீ எங்களைப் போன்ற ஏழைகளிடத்தில் எல்லாம் மனசில் அடங்காத அவ்வளவு அதிகமான ஜீவகாருண்யமும், உண்மையான இரக்கமும் வைத்திருக்கிறாய் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. யானையின் ஒரு கவளமாகிய அரிசி கீழே சிந்தினால் ஒரு கோடி எறும்புகள் அதைத் தின்று ஜீவிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறபடி, உன்னால் எத்தனையோ பிரஜைகள் தங்களுடைய ஏழ்மைப் பிணி நீங்கி க்ஷேமப்படுவார்கள் என்பது