பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

25

நிச்சயம். உன்னைப் போல் உள்ள எல்லாப் பணக்காரர்களும் இப்படி இருக்க வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் - என்றான்.

அவ்வாறு அவன் கூறி முடித்தபோது, அதை ஆமோதித்தது போல எட்டுமணி குண்டு போடப்பட்ட ஒசை கேட்டது.

அதைக் கேட்ட கந்தசாமி சடக்கென்று எழுந்து உட்கார்ந்து, தனது உடைகளில் படிந்திருந்த மணலைத் தட்டிய வண்ணம் “சரி, பணக்காரருடைய பேச்சு போதும். நேரமாகிறது. நாம் நம்முடைய ஜாகைக்குப் போவோம்; வா. இப்போதுதான் வந்த மாதிரி இருக்கிறது. மணி எட்டு ஆகிவிட்டதே. இந்த இடம் மனசைக் கவர்ந்து பரவசப் படுத்திவிட்டதப்பா. இதை விட்டு வரவே மனம் வரவில்லையே” என்று கூறிய வண்ணம் எழுந்தான். அப்போது அவனது பார்வை அவனை மிஞ்சி மேரிமகாராணியார் கலாசாலைக் கட்டிடத்தைப் பார்த்தது. கோபாலசாமியும் சிரித்துக் கொண்டு எழுந்தவனாய், “இருக்குமல்லவா. இது எப்பேர்ப்பட்ட இடம். இரண்டு விதத்தில் இந்த இடம் உன் மனசை மோகிக்கச் செய்கிறது. இந்த இடம் இயற்கையிலேயே வசீகரமாக இருக்கிறதோடு இன்னொரு விதத்திலும் இது உன் மனசைக் கவருகிறது” என்று வேடிக்கை யாகவும் குத்தலாகவும் கூறினான்.

கந்தசாமி “இன்னொரு விதமா? அது என்ன?” என்று மகிழ்ச்சியோடு கேட்க, கோபாலசாமி புன்னகை செய்த வண்ணம் “வேறு என்ன ம-ள-ள-ஸ்ரீ கந்தசாமி பிள்ளை அவர்களுடைய எஜமானியம்மாள் படிக்கும் இடம் இதுவல்லவா. அதைப் பார்க்கும் போதெல்லாம் மனசு பூரித்துப் பொங்குவது இயற்கை தானே? உன்னுடைய எஜமானியம்மாள் இப்போது இந்தக் கட்டிடத்திற்குள் இல்லாமல் இருக்கையிலேயே உனக்கு இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே. பகல் பொழுதில் அவர்கள் இங்கே படிக்கும் பொழுது பகல் வேளையில் இங்கே வந்திருந்தால், நீ கொஞ்ச நேரத்துக்கு முன் சொன்னபடி இங்கே காயும் சூரியனுடைய வெயிலைக்கூட நீ உணர மாட்டாய் என்று நினைக்கிறேன்” என்றான்.