பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

29

உடலும் ஒருயிரும் போல ஒன்றுபட்டுப் போக வேண்டும். அப்படிச் செய்யாமல், எல்லா வேலைகளையும் பணிமக்களுக்கே விட்டு, பெயருக்கு மாத்திரம் சம்சாரங்கள் என்று வெளிப் பார்வைக்குப் பகட்டாக புருஷருடன் கூடவே இருப்பதனால் மாத்திரம் அவர்களுக்குள் பற்றும் பாசமும் ஏற்படுமோ என்பது சந்தேகந்தான். முதலில், பெண்கள் தேகத்துக்கு உழைப்புக் கொடுத்து வேலைகள் செய்வதே அகெளரவதை என்று பெரிய மனிதர் வீட்டுப் பெண்கள் எண்ணிக்கொண்டு சும்மா இருக்கிறார்கள். ஆண்களைப் போல பெண்களும், நன்றாக உழைத்து வேலை செய்யாவிட்டால், தேக செளக்கியம் வெகு சீக்கிரத்தில் கெட்டுப் போகிறது. பெரிய மனிதர் வீட்டுப் பெண்கள் வெளிப் பார்வைக்குக் குதிர்போலப் பெருத்துத் தளதளப்பாக இருந்தாலும், அத்தனையும் வியாதி நிறைந்த பாண்டமே அன்றி வேறல்ல. சாதாரணமாக உழைத்துத் தமது புருஷருக்கும் தமக்கும் தேவையான ஆகாரங்களைத் தயாரிக்கும் பெண்கள் பிரசவிக்கும் போது, அது வெகு சுலபமாக நிறைவேறுகிறது. அதற்கு எட்டனா செலவுள்ள சுக்குத் திப்பிலி மருந்தோடு வைத்தியச் செலவு தீர்ந்து போகிறது. பெரிய மனிதர் வீட்டில் உள்ள பெண்கள் பிரசவிக்கிற தென்றால், அவர்களுடைய உயிர் எமலோகத்துக்கு ஒருதரம் போய்விட்டு வருகிறது. அநேகர் மாண்டும் போகின்றனர். அப்படிப்பட்டவர் ஒரு குழந்தை பெறுவதற்குக் குறைந்தது ஐந்நூறு ரூபாயாவது செலவு பிடிக்கிறது. பல இடங்களில் வெள்ளைக்கார மருத்துவச்சிகள் வந்து அறுத்து ரணசிகிச்சை செய்தும் குழந்தைகளை வெளிப்படுத்த வேண்டி இருக்கிறது. இப்படி அவர்களுடைய உடம்பு மலினமடைந்து, வியாதிக்கு இருப்பிடமாய்க் கெட்டுப் போகிறது முதலாவது பலன். இரண்டாவது பலன் அவரவர்களுக்குத் தேவையான காரியங்களை வேலைக்காரர்கள் நிறைவேற்றி விடுவதால், புருஷரும், பெண்ஜாதியும் ஒருவருக் கொருவர் அத்தியாவசியம் என்பதே இல்லாமல் போகிறது. ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யும் சந்தர்ப்பம் இல்லாமல் போனால், அதனால் ஏற்படும் வாத்சல்யமும் கனிகரமும் உண்டா கிறதில்லை. இருவருக்கும் பாலியப்பருவம் இருக்கும் வரையில்