பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

43

போம். இனி நீர் என்னுடைய புருஷனல்ல. உமக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இதோ இருக்கிறது உம்முடைய தாலி. இதையும் நீர் எடுத்தக் கொண்டு போகலாம்.” என்று சொல்லி, அந்த சரஸ்வதியம்மாள் உடனே தனது தாலியை அறுத்து அவருடைய முகத்தின் மேல் வீசி எறிந்து விட்டு, “அடே யாரடா தோட்டக்காரன்! இவரை இப்போதே இந்தப் பங்களாவுக்கு வெளியில் கொண்டு போய் விட்டுவா” என்று சொல்லி விட்டு, அப்பால் போய் வேறோர் இடத்தில் திருப்திகரமாகப் படுத்துக் கொண்டு துரங்க ஆரம்பித்தாளாம். அந்த மனிதர், பாவம்! அப்படியே ஸ்தம்பித்து இடிந்து உட்கார்ந்து போய் விட்டாராம். அவருடைய அடிவயிற்று உபத்திரவ மெல்லாம் ஒரு நொடியில் மாயமாய்ப் பறந்து போய்விட்டதாம். அவர் அந்த க்ஷணமே அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டு போய்விட்டாராம். அந்த அம்மாள் இப்போது ஏதோ ஒரு பெண் கலாசாலையில், பெரிய உபாத்தியாயினி உத்தியோகம் பார்த்து, தன்னிடம் படிக்கும் சிறுமிகளை எல்லாம், தன்னைப் போலாக்கும் மகா உத்தமமான திருப்பணியை எவ்வித ஆதங்கமும் இன்றி நடத்தி வருகிறாளாம். அவர் வேறே ஒரு பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டு சுகமாக இருந்து வருகிறாராம். இப்படிப்பட்ட ஸ்திரீகள் ஒரு புருஷரைக் கட்டிக் கொள்வதைவிட கன்னிகையாகவே தம் ஆயிசுகாலம் முடிவு வரையில் இருந்து விடுவது உத்தமமான காரியம். ஒரு ஸ்திரி ஒரு புருஷனுக்குப் பெண்ஜாதி ஆவதென்றாலே, அவளுடைய ஏதேச்சாதிபத்யமும் எஜமானத்துவமும் போய், அவள் பராதீனப் படுகிறாள் என்பது தான் அர்த்தம். அவள் எந்த மனிதனைக் கலியாணம் செய்து கொண்டாலும் சரி; அவனுடைய மனம் கோணாதபடி நடந்து கொண்டு தான் தீரவேண்டும். எப்படிப் பட்டவனும் தன் சம்சாரம் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று பிரியப்படுவானே அன்றி, அவளுக்குத் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று எண்ணவே மாட்டான்; விரும்பவும் மாட்டான்; வெள்ளைக்காரருடைய சமத்துவம் இந்த விஷயத்தில் நமக்குச் சரிப்படவே சரிப்படாது.