பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

45

தலைவனோடு சமத்துவம் பாராட்டினால், அது துன்பமாகத்தான் முடியும். நீ எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள். குடும்ப ஸ்திரீகள் எப்பேர்ப்பட்ட மகாராஜனுடைய மகளாக இருந்தாலும், கல்வியில் சரஸ்வதியினுடைய அவதாரமாக இருந்தாலும், புருஷனிடத்தில் கொண்ட அந்தரங்கமான பிரியத்தினாலும் மதிப்பினாலும் சுயேச்சையாகவே அவனுக்கு அடிமை போல நடந்து கொள்ளும் ஸ்தானத்தை வகிப்பவள். இதற்கு உவமானம் நான் என்னுடைய அண்ணியைத் தான் திருப்பித் திருப்பிச் சொல்ல நேருகிறது. அவளைப் போல சிலாக்கியமானவளும் இல்லை; அவள் போல, அவ்வளவு பணிவாகவும், சலிப்பில்லாமல் உழைப்பவளும் உலகில் கிடையார்கள். அப்படி இருப்பதனால், எங்கள் குடும்பத்தில் உள்ள சகலமானவர்களும் அவளைத் தங்கள் இருதய கமலத்தில் வைத்து எங்கள் குல தெய்வம் போல மதித்துப் பாராட்டி வருகிறோம். அவளுடைய சொல்லுக்கு இரண்டாவது சொல் எங்கள் வீட்டில் யாரும் சொல்லுகிறதில்லை. அவ்வளவு தூரம் அவள் எங்களுடைய மனசை எல்லாம் கவர்ந்து எங்களை அவளுக்கு அடிமை போலச் செய்து கொண்டாள். இந்தக் கலாசாலையில் தங்கக்கூண்டில் அடைபட்டு இருக்கும் பஞ்சவர்ணக்கிளிகள் போலத் தத்தி இராப் பகலாக இங்கிலீஷ் புஸ்தகங்களைக் கட்டியழுது உண்மையான விவேகம் இருக்கும் மூலை தெரியாமல் தங்களுடைய யெளவனப் பருவத்தையும், அழகையும், கண்களையும் கெடுத்து, எண்ணெயை விணில் விரயம் செய்து கொண்டிருக்கும் இந்தப் பெண்கள் எல்லாம், எங்கள் வீட்டுக்குப் போய் என் அண்ணி குடும்பத்தை எப்படி நடத்தி மற்றவரிடம் எப்படி நடந்து கொள்ளுகிறாள் என்பதை ஓர் ஆறுமாச காலம் கவனிப்பார்களானால், இங்கே இவர்களுடைய ஆயிசுகாலம் எல்லாம் படித்தால் கூடத் தெரிந்து கொள்ள முடியாத உண்மையான விவேகத்தையும், எப்படிப்பட்ட மனிதரையும் அடக்கி முடிசூடாச் சக்கரவர்த்தினிகள் ஆகத்தகுந்த அரிய சூட்சுமங்களையும் தெரிந்து கொண்டு தங்களுடைய ஆயிசுகாலம் எல்லாம் சந்தோஷமாகவும் ஷேம மாகவும் இருக்கலாம். சாதாரணமாக இல்லறம் நடத்தும் ஸ்திரீகள் பி.ஏ.,