பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

மாயா விநோதப் பரதேசி

கொண்டிருந்து, அவளுடைய உண்மையான குணாதிசயங்கள் எப்படி இருக்கின்றன என்பதை ஒரு நொடியில் தெரிந்து கொண்டு வந்து விடுகிறேன். அவள் அவளுடைய தகப்பனாருக்கு டெலிபோன் அனுப்பாமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.

கோபாலசாமி:- (கைகொட்டி ஆனந்தமாக நகைத்து) பேஷ்! பேஷ் முதல் தரமான தந்திரம். அப்படியே செய்துவிடுவோம். நாம் போவதானால் வெறுங்கையோடு போகக் கூடாது.

கந்தசாமி:- நல்ல உயர்வான இரண்டு ரவிக்கைத் துண்டுகள் வெற்றிலை பாக்கு பழவகைகள் மஞ்சள் குங்குமம் முதலியவை களை எல்லாம் வாங்கிக் கொண்டு போவோம்.

கோபாலசாமி:- “சரி; அப்படியே செய்து விடுவோம். ஆனால் முடிவு மாத்திரம் மாறும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வளவு தூரம் பேசும் நீ எப்படியும் அவளைக் கண்டு நிரம்பவும் மயங்கித் தான் போவாய். கலியாணம் முடிவதென்னவோ நிச்சயம்; இப்போது முன்னால் போவதில், பெண்ணினிடம் ஏதாவது கெடுதலிருந்தால், அதைத் தெரிந்து கொண்டு நாம் வீணில் மனசைப் புண்படுத்திக் கொள்வது தான் மிஞ்சப் போகிறது — என்றான்.

அதைக் கேட்ட கந்தசாமி, “சரி எது மிஞ்சினாலும் மிஞ்சட்டும். அந்தப் பெண்ணை எப்படியும் நான் பார்த்துத் தான் ஆக வேண்டும் என்ற ஒரு மூர்க்கமான ஆவல் என் மனசில் உண்டாகிவிட்டது. அதை நாம் எப்படியாவது நிறைவேற்றிவிடுவோம். நான் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது ஒரு வேளை தெரிந்து போனால் கூட அதனால் கெடுதல் ஒன்று மில்லை. நான்தான் மாப்பிள்ளை என்பது வெளியானாலும், அவர்கள் என்னை ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்றான். கோபாலசாமி அதை ஆமோதித்தான். அதன் பிறகு இருவரும் திருவல்லிக்கேணி டிராம்வண்டிப் பாதையை அடைந்து, வண்டியிலேறி, தங்கள் ஜாகை இருக்கும் கோமளேசுவரன் பேட்டைக்குச் சென்றனர்.