பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

மாயா விநோதப் பரதேதி


அத்தனை பேரும் ஏராளமான பணச் செலவு செய்து கொண்டு போய் முன்னொரு தடவை பட்ட பாடெல்லாம் வீணாய்ப் போனது போல இந்தத் தடவையிலும், காரியம் கெடக்கூடாது. நாம் ஒரு காரியத்தில் இறங்கினால் அது தவறாமல் நிச்சயமாக முடிய வேண்டும். அதற்குத் தக்கபடி நாம் சகலமான விஷயங்களையும் தீர்க்காலோசனை செய்து முன் எச்சரிக்கையான ஏற்பாடுகளோடு போக வேண்டும். அப்படிப் போனால் தான் காரியம் நிச்சயமாகக் கைகூடும். நம்முடைய எத்தனங்களையும் மீறி தற்செயலாகக் காரியம் கெட்டுப் போகும் பட்சத்தில், அதற்கு நாம் உத்தரவாதியல்ல. நாம் செய்யும் யோசனைகள் எல்லாம் ஆணித்தரமான யோசனைகளாக இருக்க வேண்டும்.

மாசிலாமணி:- இப்போது நான் சொன்ன யோசனையில் ஏதாவது ஆட்சேபனைக்கு இடம் இருக்கிறதா?

இ. சேர்வைகாரன்:- அதிகமாக ஒன்றுமில்லை. நம்முடைய ரமாமணி வேலாயுதம் பிள்ளையின் வீட்டு ஜனங்களோடு சேர்ந்து கொண்டு அவர்கள் சந்தேகப்படாதபடி இருப்பது ஒரு பெரிய காரியமல்ல. அவள் அதை சுலபத்தில் நிறைவேற்றக் கூடிய சாமர்த்தியசாலிதான். அன்றைய தினம் இரவில் அவள் கதவைத் திறந்து விடுவதும் சுலபமான வேலை தான். அதன் பிறகு ஆள்களை அழைத்துக் கொண்டு போய் கண்ணப்பா முதலியோர் படுத்திருக்கும் இடத்தைக் காட்டி அங்கங்கு நிற்க வைக்கலாம். ஆனால், அப்போதும், அவர்கள் எல்லோரும் ஒரே காலத்தில் எதிரிகளை மூளியாக்குவதற்கு முன்னும், யாராவது விழித்துக் கொண்டு கூச்சலிட்டால் எல்லோரும் உடனே குபிரென்று எழுந்து விடுவார்களே! நாங்கள் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும், அந்த இக்கட்டான நிலைமையில் என்ன செய்ய முடியும்? அத்தனை ஜனங்களுக்கு முன்னால் நாங்கள் அதற்குமேல் நம்முடைய கருத்தை நிறைவேற்றுவது முடியாத காரியம் ஆய்விடும். நாங்கள் அவர்களுடைய கையில் அகப்படாமல் தப்பித்துக் கொள்வதைத் தவிர வேறே எதையும் செய்வதற்கில்லை. ஆகையால் அதற்குத்தான் ஏதாவது தக்க யோசனை செய்ய வேண்டும்.