பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

107


எங்கள் வேலையை சுலபத்தில் முடித்துவிட்டு வந்து விடுகிறோம். வரும் போது ரமாமணியையும் அழைத்துக் கொண்டு வருவதோடு, அங்கே மயங்கிக் கிடக்கும் பெண் பிள்ளைகள் ஏராளமாகப் போட்டுக் கொண்டிருக்கும் வைரம் முதலிய விலை உயர்ந்த ஆபரணங்களை எல்லாம் பிடுங்கி மூட்டை கட்டிக் கொண்டு வந்து சேருகிறோம்.

மாசிலாமணி:- பேஷ்! நல்ல முதல் தரமான யோசனை; சேர்வைகாரரே! மெச்சினேன்! அப்படியே செய்துவிடும். அங்கே நீங்கள் கைப்பற்றும் ஆபரணங்களை எல்லாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அவைகளை எல்லாம் என்னிடம் கொண்டுவர வேண்டாம். எனக்கு, நாம் கோரும் காரியம் ஆனால், அதுவே போதுமானது. நம்முடைய ரமாமணியை மாத்திரம் நீர் நிரம்பவும் பத்திரமாகக் காத்து என்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டியது. அவள் அபினித் திராவகத்தை குழம்பில் வெகு சுலபமாக வார்த்துவிடுவாள். அதைப்பற்றி நாம் கொஞ்சமும் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், இதில் ஒரு விஷயம் இருக்கிறது. வேலாயுதம் பிள்ளை, கண்ணப்பா முதலிய நம்முடைய எதிரிகள் எல்லோரும் அதை உண்டு மயங்கிக் கிடப்பார்களே, அந்தச் சமயத்தில் அவர்களுடைய மூக்கு முதலிய வற்றை அறுத்தால், அவர்கள் அந்தப் பாதையை அவ்வளவாக உணரமாட்டார்கள். அவர்கள் சரியானபடி அவஸ்தைப்படாமல் சகித்திருப்பதற்கு நாமே மருந்து தேடின. மாதிரி ஆய்விடுகிறதே என்பது தான் என் மனசுக்குக் கொஞ்சம் குறையாக இருக்கிறது. இருந்தாலும் பாதகமில்லை. எப்படியாவது அவர்கள் மூளி ஆக வேண்டியது ஒன்றே முக்கியமான விஷயம். எனக்கு இன்னொரு சந்தேகமும் உண்டாகிறது. நீங்கள் அவர்களுடைய முக்கு, காது முதலிய இடங்களை அறுக்கப் போகிறீர்களே. தங்களுடைய போதையில், அவர்கள் அறுபட்ட பிறகு எவ்வித சிகிச்சையும் இல்லாமல் அப்படியே மயங்கிக் கிடந்தால், உடம்பில் உள்ள இரத்தம் எல்லாம் வெளிப்பட்டுப் போவதனால், அவர்களுடைய உயிருக்கு அபாயம் நேர்ந்து விடுமோ என்னவோ?