பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

மாயா விநோதப் பரதேசி

தீரவேண்டும். அதற்கு முன் அவர்கள் என்னைச் சுத்தமாக மறந்து போகும்படி செய்து கொண்டால், என் வேலை எளிதில் பலிதமடையும். இத்தனை பேருடைய க்ஷேமம் பெரியதே அன்றி, என் சம்சாரம் விதவையாய் விட்டாள் என்ற இழிவைக் கொஞ்ச காலம் வகிப்பது ஒரு பொருட்டாகாது. முடிவில் நான் மறுபடியும் உயிரோடு திரும்பி வரும்போது ஜனங்கள் என் மனைவியின் சாமர்த்தியத்தையும், வீரத்தனத்தையும், தியாக புத்தியையும் மெச்சிப் புகழுவார்கள் அல்லவா? இப்போது உண்டாகும் இழிவெல்லாம் அப்போது தானாகப் பறந்து போய் விடும். இதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? உண்மை அல்லாத ஓர் இகழ்ச்சியை நாம் இலட்சியம் செய்வதே கூடாது.

கண்ணப்பா:- வாஸ்தவமான விஷயம். பெண் பிள்ளைகள் சுபாசுபம் ஒன்றையே கவனிப்பார்களன்றி, உசிதாவுசிதத்தை எண்ண மாட்டார்கள். என் மனசுக்கு சுவாமிகளுடைய போசனை நிரம்பவும் சிலாக்கியமானதாகவே! தோன்றுகிறது. அப்படியே செய்து விடலாம் என்று நினைக்கிறேன், ஆனால் எனக்கு இன்னொரு சந்தேகம் உண்டாகிறது. இப்போது தாங்கள் இறந்து போய் விட்டதாக நாம் பிரஸ்தாபப்படுத்தி விடுகிறதாக வைத்துக் கொள்வோம். இந்தச் சங்கதி நம்முடைய எதிரிகளுக்கு எட்டுவதோடு, நம்முடைய துரைத்தனத்தாருக்கும், போலீஸ் சூபரின் டெண்டெண்டு முதலிய உத்தியோகஸ்தகர்ளுக்கும் எட்டுமே, அவர்களும் இதை உண்மை என்றுதானே நம்புவார்கள். தங்களுடைய உத்தியோகம் போய்விட்டதாக அவர்கள் உத்தரவு பிறப்பித்து விடுவார்கள். மறுபடி தாங்கள் வெளிப்படும்போது, இந்த உத்தியோகத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்ய நேரும். அதுவுமன்றி தாங்கள் கச்சேரி நடத்துவதற்காக சர்க்காரார் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இந்த பங்களாவையும் தங்களுடைய சம்சாரம் காலி செய்து கொடுத்துவிட நேரும். அதன்பிறகு அந்த அம்மாளை எங்கே வைக்கத் தீர்மானித்திருக்கிறீர்கள்?

வடிவாம்பாள்:- அவர்கள் நம்முடைய ஜாகைக்கு வந்து விடட்டும். அவர்களுக்கு ஒரு குறைவும் இல்லாமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.