பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

121

அதிகமாக வலுப்படுத்திக் கொண்டாள். ஆனாலும், அவன் எப்போதும் இல்லாமல் பக்கிரியா பிள்ளையே சதாகாலமும் தன்னோடு இருப்பதையே அவள் பரமபதமாக நினைத்து வந்தாள். மாசிலாமணியின் அபாரமான பிரியமும், அவனது பெருஞ் செல்வமும், அதனால் உண்டான செல்வாக்கும், வசதிகளும், செளகரியங்களும் நிரந்தரமாகத் தனக்கு இருக்க வேண்டும், அவைகளோடு தான் தனது காதல் முழுதையும் பக்கிரியா பிள்ளை மீதே செலுத்தி, அவனும் தானும் எப்போதும் ஒப்புயர்வற்ற இன்பம் அனுபவித்திருக்க வேண்டும் என்பதே அவளது உள்கருத்து. அவள் தனது அபார சாமர்த்தியத்தைக் கொண்டும், தனது தாய் தந்தையரின் உதவியைக் கொண்டும், நிரம்பவும் திறமையோடு நடித்து வந்ததோடு, அதைப்பற்றி மாசிலாமணி சிறிதும் சந்தேகியாதபடி பாசாங்கு புரிந்து வந்தாள். தானும் பக்கிரியா பிள்ளையும் ஒன்றாக இருக்கையில் சயன அறைக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மாசிலாமணி வந்துவிட நேர்ந்தால், பெருத்த அபாயம் வந்துவிடும் என்ற கருத்தோடு, அவள் தனது கட்டிலைச் சுற்றிலும் பொருத்தப் பெற்றிருந்த நிலைக் கண்ணாடிகளுக்குப் பின்னால் மறைந்திருந்த பீரோக்களில் ஒன்றை விலக்கி, அவ்விடத்தில் தரையில் ஓர் ஆள் இறங்கத் தகுந்த வழி செய்து, அவ்விடத்தில் இருந்து கீழ்க்கட்டிற்கு இறங்க ஓர் ஏணியை வைத்திருந்தாள். எப்பொழுதாவது மாசிலாமணி வந்தால், நடைக் கதவைத் திறந்து விடும் வேலையைச் செய்து வந்த அவளது தந்தை உடனே அவளுக்கு அந்த வருகையை அறிவுறுத்த வேண்டும் என்பதும் அவளது ஏற்பாடு. உடனே பக்கிரியா பிள்ளை நிலைக் கண்ணாடிகளுக்குப் பின்னால் போய் பழந்துணிகளையும் பலகையையும் விலக்கிக் கொண்டு ஏணியின் வழியாய்க் கீழே இறங்கி, வீட்டின் பின் வாசல் வழியாய்ப் பக்கத்துத் தெருவுக்குப் போய் விடுவான். ரமாமணியின் தாயார் உடனே ஏணியை அப்புறப்படுத்தி விடுவாள். ரமாமணி ஒரு பாவத்தையும் அறியாத பரம சாதுபோல அப்போதே மலர்ந்த தாமரைப் புஷ்பம் போன்ற முகத்தோடு மாசிலாமணியை வரவேற்று, அவனிடம் மகா உத்தம பத்தினி போல நடந்து கொள்வாள். மாசிலாமணியின்