பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

மாயாவிநோதப் பரதேசி

மாசிலாமணி ஆனந்தமயமாக மாறிப் போய், "பேஷ்! நீ சொல்லுவது நன்றாக இருக்கிறது. சூரியன் நவவியாகரண பண்டிதன் என்று எல்லோரும் அவனைப் புகழுவது மூடத்தனம் என்றே சொல்ல வேண்டும். உண்மையான பதிவிரதை யார், அரைகுறையான பதிவிரதை யார் என்பதை அவன் தெரிந்து கொள்ளக் கூடவில்லை. அது போகட்டும். நீ நளாயனியைவிட அதிகமான கற்புடைய உத்தம பத்தினி. ஆகையால், உன் புருஷனாகிய நான் சொல்வதை மீறி நீ நடக்கக் கூடாதல்லவா; ஆகையால், நீ சொல்லும் நியாயப்படி பார்த்தாலும், நீ என் இச்சைப்படி பட்டணம் போக வேண்டியவளாகி விட்டாய்" என்று கூறிக் கண் சிமிட்டினான்.

அதைக் கேட்ட ரமாமணி ஆசையோடு அவன் மீது சாய்ந்து குலுங்கக் குலுங்க நகைத்து. "ஆகா! நீங்கள் பலே ஆசாமியல்லவா! பேச்சில் உங்களை ஏமாற்ற யாரால் முடியும்? நான் சொன்ன சொல்லைக் கொண்டே என் வாயை அடக்கி விட்டீர்களே! நான் எதற்காக அந்த உவமானம் சொன்னேன்! நீங்கள் அதை எப்படி மாற்றிவிட்டீர்கள்; இரவில் நீங்கள் இங்கே வந்தால், உங்களை விட்டுப் பிரியமுடியாமல் போகிறதென்றும், பொழுது ஏன் விடிகிறதென்றும் நான் சங்கடப்படுவதால், மூன்று தினம் வரையில் உங்களை விட்டு நான் எப்படிப் பிரிந்திருப்பேன் என்று சொன்னால், நீங்கள் என் கையைக் கொண்டே என் கண்ணைக் குத்துகிறீர்களே" என்று கட்டிலடங்காக் குதூகலத்தோடு கூறினாள்.

உடனே மாசிலாமணி, "கண்ணே ! ஏன் என்னோடு இப்படி வாதாடுகிறாய். இந்த விஷயம் நமக்கு மகா முக்கியமான விஷயம் என்பதும், இங்கே, நான் வரக்கூடாத நிலைமையில் இருக்கிறேன் என்பதும் உனக்குத் தெரிந்திருந்தும், அறிவில்லாத மூடஸ்திரீ போல நீ பேசுகிறாயே, போதும், எனக்கு நேரமாகிறது. நான் வேறே சில அவசர காரியங்களைக் கவனிக்க வேண்டும். இன்றைய சாயுங்கால வண்டிக்குப் போகத் தயாராக இரு. வண்டியோடு இடும்பன் சேர்வைகாரன் வருவான். அவனோடு தனியாகப் போக, உனக்கு லஜ்ஜையாக இருந்தால், உன்னோடு கூட. உன் தகப்பனார் முதலிய யாரையாவது துணைக்கு அழைத்துக் கொண்டு போ" என்றான்.