பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

137

கிடைக்குமோ தெரியவில்லையே. நான் உங்களைவிட மாட்டேன்" என்று கூறி அழுது பாசாங்கு செய்தபடி, அவனை வெளியில் நடத்திக் கொண்டே வந்தாள், இருவரும் கூடத்தைக் கடந்து படிக்கட்டின் வழியாகக் கீழே இறங்கினார்கள். அவ்விடத் தில் ரமாமணியின் தந்தை நின்றதைக் கருதி இருவரும் வெவ்வேறாகப் பிரிந்தனர். அடுத்த நிமிஷம் மாசிலாமணி வெளியில் செல்ல, நடைக்கதவு மூடி உள்பக்கம் தாளிடப் பெற்றது. உடனே ரமாமணி தன் தகப்பனுக்கு ஏதோ சைகை காட்டிவிட்டு தடதடவென்று மெத்தைக்கு ஓடிப் பள்ளியறைக்குள் புகுந்தாள். உடனே நிலைக் கண்ணாடி ஒன்று சடக்கென்று திறந்து கொண்டது. அடுத்த நிமிஷம் தவில்காரப் பக்கிரியா பிள்ளை ஓடி வந்து ரமாமணியை அணைத்துக் கொண்டான். அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து, "ஆ! என்ன ஆச்சரியம்! நீ வீட்டிற்குப் போயிருப்பாய் என்றல்லவா நினைத்து துக்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நல்ல வேளை! போகாமல் இருந்தாயே! கண்ணூ! உனக்கு நான் ஒரு சந்தோஷ சங்கதி வைத்திருக்கிறேன்" என்று கூறிய வண்ணம் பக்கிரியா பிள்ளையைக் கட்டித் தூக்கி மெத்தையின் மேல் உட்கார வைத்து, அவனது மடியின் மீது தலையை வைத்து 'அப்பாடா' என்று சாய்ந்து கொண்டாள்.

உடனே பக்கிரியா பிள்ளை , "கண்ணூ ! ஒரு நாளும் இல்லாமல் இந்த நொண்டிப்பயல் இன்றைய தினம் வந்து நம்முடைய சந்தோஷத்தைக் குலைப்பான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் இங்கே வந்து கால் நாழிகைகூட இருக்காது. திடீரென்று இவன் வந்து சேர்ந்தானே! இவனைக் கொன்று போட்டு விடலாமா என்ற ஆத்திரம் என் மனசில் பொங்கிப் போய் விட்டது. நீ பயப்பட்டதைக் கருதி நான் அப்பால் போய் மறைந்து கொண்டேன். இவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுப் போக மனம் வரவே இல்லை. அதுவுமன்றி இந்த நொண்டி உன்னிடம் என்ன சொல்லுகிறான் என்பதைக் கேட்க வேண்டும் என்ற ஓர் ஆசையும் உண்டாயிற்று. அதனால் நின்று கொண்டிருந்தேன். நீங்கள் பேசினதை எல்லாம் நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நீ சொல்லப் போகும் சங்கதி எனக்கே தெரியும். நீ பட்டணத்திற்குப் போகிற சங்கதிதானே" என்றான்.