பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

141

நடந்த சம்பவங்களைக் கூறுவது அவசியம் ஆதலால், சோபன முகூர்த்த வரலாற்றைப் பின்னோர் அதிகாரத்தில் விஸ்தரிப்போம்.

அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை என்பதை நாம் மறுபடி நினைவூட்டுவது அநாவசியம். மறுநாளாகிய புதன்கிழமை பிற்பகலில் எல்லோரும் புறப்பட்டு சென்னைக்குப் போக ரயிலேறுவது என்பது அவர்களது ஏற்பாடென முன்னரே கூறப்பட்டிருக்கிறது. வேலாயுதம் பிள்ளை சென்னையில் நடக்கப் போகும் நிச்சயதார்த்தத்தை நிரம்பவும் சிறப்பாகவும் டாம்பீகமாக வும் நடத்த வேண்டும் என்று, அதற்காக ஒரு லட்சம் ரூபாய் திட்டம் போட்டிருந்தார் அல்லவா. அதன்படி அவர்கள் மன்னார் குடியில் இருந்து சேகரம் செய்து எடுத்துக் கொண்டு போக வேண்டிய சகலமான வஸ்துக்களையும் திங்கட்கிழமையே கொணர்ந்து தமது மாளிகையில் நிரப்பிவிட்டார். கலியாணப் பெண்ணிற்கு, முழுதும் தங்க ஜரிகைகளும் நவரத்னங்களும் வைத்து நெய்யப்பட்டவையும், ஐயாயிரம் ரூபாய் பெறத்தக்கவையுமான புடவையும், ரவிக்கையும், சாம்பிராணி, அகில், கஸ்தூரி மஞ்சள் முதலியவற்றின் புகை. போடப்பெற்று, அவைகளை வைப்பதற்கென்றே தயாரிக்கப் பெற்றிருந்த அழகான ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. ஆறாயிரம் ரூபாய் பெறுமானம் உள்ள முதல்தரமான ஒரு ஜதை வைரக் கம்மல், வைரங்களும், கெம்புகளும், பச்சைகளும் முற்றிலும் பதிப்பிக்கப்பெற்ற அற்புதமான ஒட்டியாணம், வரிசைக்கிரமமான பருமனுடைய ஐந்து பதக்கங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாகத் தொங்கப்பெற்ற சீமைக்கல் அட்டிகை, நவரத்னம் இழைத்த புதுமை புதுமையான வளையல்களில் எட்டு, பெரும் பெரும் வைரங்கள் நடுநாயகமாய் அமைந்த முகப்புகள் வைத்த தங்கக்காப்பு, கொலுசு, வங்கி, நாகப்படம், கொண்டைப்பூ, திருகுபூ, உச்சிப்பூ, இராக்கடி, தாழம்பு, சந்திரப்பிரபை, சூரியப்பிரபை, நெற்றிஸரம், கண்டஸரம், பேசரி, மூக்குப்பொட்டு, பாதஸரம், சிலம்பு, மிஞ்சி, பீலி முதலிய பாதாதிகேசம் வரையில் அணிவதற்குத் தேவையான சகலமான ஆபரணங்களும், அவைகளை எப்போதும் வைப்பதற்கென்றே