பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

157


உடனே திரிபுரசுந்தரியம்மாள், “அந்த மாசிலாமணி பணத் திமிர் கொண்டவனல்லவா. இவன் எப்போதும் கந்தசாமியோடு கூட இருக்கிறான் என்று தெரிந்து கொண்டு, இவனுக்கு ஏதாவது பணம் கொடுத்து இவனைக் கையில் போட்டுக் கொண்டு, இவன் மூலமாகக் கந்தசாமிக்கும், மனோன்மணிக்கும் கெடுதல் செய்ய எத்தனித்தார்களோ என்னவோ” என்றாள்.

வேலாயுதம் பிள்ளை, “அப்படித்தான் இருக்க வேண்டும். அதற்குத் தகுந்த சிட்டையை ஈசுவரன் கைமேல் நடத்தி விட்டார். கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு நாளும் பொய்யாகாது” என்றார்.

உடனே கண்ணப்பா அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டு வண்டியில் ஏறிக் கொண்டு தந்தி ஆபீசுக்குப் போய், பட்டாபிராம பிள்ளைக்கு அவசர தந்தி அனுப்பிவிட்டு, அப்படியே நேராகக் கும்பகோணம் போய் திகம்பரசாமியார் குறித்த பாலத்தின் உள்வாயில் அவருக்குத் தெரிவிக்க வேண்டிய விவரங்களை எல்லாம் எழுதி வைத்து விட்டு உடனே திரும்பி மன்னார்குடிக்கு வந்து சேர்ந்தான்.

வேலாயுதம் பிள்ளையின் யோசனைப்படி நடராஜ பிள்ளையும் மற்ற ஆள்களும் வீட்டையும், சாமான்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். அன்றைய தினம் முழுதும், வேலாயுதம் பிள்ளை, திரிபுரசுந்தரியம்மாள், கண்ணப்பா, வடிவாம்பாள் ஆகிய நால்வரும் அன்னத்தையாவது தண்ணீரையாவது நாடாமல், ஏக்கமும் துயரமும் கவலையுமே வடிவாக ஓய்ந்து எப்போது பட்டணம் போவோம் என்று முற்றிலும் ஆவலே நிறைவாக மாலை நேரத்தின் வருகையை எதிர்பார்த்துத் துவண்டு கிடந்து சாயுங்காலம் அவ்வூரில் இருந்து புறப்பட்ட ரயில் வண்டியில் ஏறி சென்னைக்குப் பிரயாணம் போயினர்.

பல ஆட்களோடு வீட்டைக் காவல் காத்திருந்த நடராஜ பிள்ளை, கந்தசாமி காணாமல் போன விஷயத்தைக் குறித்து அளவற்ற துயரமும் கவலையும் கொண்டவராய், இரவு முழுதும்