பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

மாயா விநோதப் பரதேசி

உள்ளே வர மாட்டார்கள். அவள் வீட்டுக்குள் மறைவான இடத்தில் இருக்கட்டுமே. தப்பித் தவறி, யாராவது உள்ளே வந்து விட்டால், இதற்கு முன் இறந்து போன அவளுடைய தகப்பனார் பாட்டனார் முதலிய யாரையாவது நினைத்துக் கொண்டு ஒரு குரல் அழுதால், அதோடு வந்தவர் போய்விடுகிறார்கள்.

வடிவாம்பாள்:- இதெல்லாம் சரிதான்; தாங்கள் இனி எங்கே இருப்பதாக உத்தேசித்திருக்கிறீர்கள்? இவ்வளவு தூரம் காரியங்கள் நடந்த பிறகு, தாங்கள் உயிரோடிருப்பது தெரியவே கூடாதே. தங்களை யாரும் காணாதபடி மறைந்து கொண்டிருக்க வேண்டுமே.

சாமியார்:- (புன்னகை செய்து) நான் தான் இறந்து போனவனாயிற்றே. என்னுடைய ஸ்தூல சரீரத்தைக் கண்டுபிடிக்கக் கூடிய சக்தி வாய்ந்தவர்கள் யார் இருக்கிறார்கள்? என்னுடைய ஜீவாத்மா மாத்திரம் ஆங்காங்கு போய்வந்து கொண்டிருக்கும். நான் இன்ன இடத்தில் தான் இருப்பேன் என்று இப்போது சொல்ல முடியாது. இனி ஏற்படப்போகும் சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தபடி நான் எங்கும் இருப்பேன். என்னைப்பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப் படவே வேண்டாம். இன்றைய தினம் இரவில் என்னுடைய தகனம் வரையில் ஒழுங்காக நடத்திவிட்டு, அதன் பிறகு உடனே புறப்பட்டு நான் கும்பகோணம் போகப் போகிறேன்.

கண்ணப்பா:- நாங்கள் ஏதாவது அவசர நிமித்தம் தங்களைப் பார்க்க வேண்டுமானால், எங்கே பார்க்கிறது?

சாமியார்:- என்னைப் பார்க்க வேண்டும் என்றால், அநேகமாய்க் கும்பகோணத்தில் பார்க்கலாம். அல்லது, எனக்குத் தெரிவித்தால், நானே தங்களுடைய ஜாகைக்கு ரகசியமாக வந்து விட்டுப் போகிறேன்.

கண்ணப்பா:- கும்பகோணத்தில் எந்த இடத்தில் ஜாகை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்?. மல்லகஜெட்டித் தெருவில் உள்ள என் அம்மான் வீட்டில் தாங்கள் இருப்பது சௌகரியமாக இருக்குமே.