பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

மாயா விநோதப் பரதேசி

கடவுளை நினைத்து ஸ்தோத்திரம் செய்தவண்ணம் ஊணுறக்கம் இன்றிப் பொழுதைப் போக்கினார். மறுநாளாகிய புதன்கிழமை அன்று, பட்டணம் போவதற்காக, வேலாயுதம் பிள்ளையின் விருந்தினர்களும், முதல் நாள் இரவில், ஏதோ அவசர காரியமாய்த் தமது பங்களாவிற்குத் திரும்பிப் போயிருந்த சுந்தரம் பிள்ளையும் சிவக்கொழுந்தம்மாளும் வந்து சேர்ந்தனர். பட்டணத்தில் நிகழ்ந்த சம்பவத்தின் விவரங்களையும், வேலாயுதம் பிள்ளை முதலியோர் முதல் நாளே பட்டணம் போயிருக்கும் செய்தியையும் கேட்ட விருந்தினர் எல்லோரும் கரைகடந்த வேதனையும் அங்கலாய்ப்பும் அடைந்து விசனமே வடிவாக மாறிப் போயினர். அவ்விடத்தில் கூடியிருந்த எல்லோரும் தந்தி ஆபீசிலேயே ஓர் ஆளை வைத்துப் பட்டணத்தில் இருந்து எப்போது தந்தி வரும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். அன்றைய தினம் பகலில் நடராஜ பிள்ளைக்கு ஒரு தந்தி வந்தது. அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:-

கூேடிமமாய்ப் பட்டணம் வந்தோம். பையன் இன்னமும் அகப்படவில்லை. மறுபடி தந்தி வந்த பிறகு நீங்கள் புறப்பட்டு வரலாம். விருந்தாளிகளை உபசரித்து நம்முடைய வீட்டிலேயே இருக்கச் செய்யுங்கள்.

கண்ணப்பா.

என்று கிடைத்த செய்தியை உணர்ந்த சுந்தரம் பிள்ளை, நடராஜ பிள்ளை, விருந்தினர் முதலிய எல்லோரும் மனத்தளர்வும் துயரமும் அடைந்து ஓய்ந்து போய், செய்வது இன்னதென்பதை அறியாது ஊணுறக்கம் இன்றி அதே பேச்சாகப் பேசிக் கொண்டு அந்த மாளிகையிலேயே இருந்தனர்.

அன்றைய தினம் கழிந்தது. மறுநாட்களாகிய வியாழக் கிழமையும் வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு தந்தி வந்தது. அந்தத் தந்தியிலும் முதல் நாளில் வந்த செய்தியே காணப்பட்டது. அவர்களது விசனமும் கவலையும் சஞ்சலமும் மலை போலப் பெருகிக் கொண்டே இருந்தன. சனிக்கிழமை தினம் வரும் தந்தியாவது நல்ல செய்தியைக் கொண்டு வராதா