பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

மாயா விநோதப் பரதேசி

கட்டழகும், ஸரஸ குணங்களும் வாய்ந்தவளான ரமாமணி அவனுக்கு ஆசை நாயகியாய் ஏற்பட்டிருந்தும், பெண் வேஷம் தரித்திருந்த கேவலம் ஓர் ஆண்பிள்ளையைக் கண்டு அவன் அவ்வாறு கட்டிலடங்காப் பெருங்காமம் கொண்டது கடவுளது சிருஷ்டியில் காணப்படும் எண்ணிறந்த விநோதங்களுள் பெரியதொரு விநோதமென்றே நாம் கூற வேண்டும். ஆண் பாலாரிலும், பெண் பாலாரிலும் அநந்தம் பேர் இது போலவே இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற மனப்பிராந்திக்கு அடிமையாய், ஒன்றைவிட்டு இன்னொன்றைப்பற்றி, எவ்விடத்திலும் திருப்தி அடையாதவராய்த் தமது ஆயுள் காலம் முடிய நிம்மதியற்ற அலகைகள் போல் இருந்தே மடிவது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. எவ்வித இன்பமாயினும், தமக்குக் கிடைக்கும் சொற்பத்தோடு திருப்தியடைந்து, நிர்ணயம் தவறாது இருந்து, தமது ஆயுட்காலத்தைக் கழிப்போரும் இவ்வுலகில் அகந்தமாக இருக்கின்றனர். மனிதனது ஆசைக்கு அளவில்லை என்பது மண்ணாசை பொன்னாசை ஆகிய இரண்டையுமே முக்கியமாய்க் குறிப்பதாக இருக்கிறது. கோடி கோடியான சம்பத்தைச் சேர்த்து வைத்திருப்போரும் அதை வட்டிக்குக் கொடுத்து மேன்மேலும் வளர்ப்பதிலேயே கண்ணுங் கருத்துமாயிருக்கின்றனர். உலகைத் துறந்து காஷாயம் பெற்றுக் கொண்டு திரியும் சந்நியாசிகள் கூடத் தமக்கு ஏராளமாகப் பாத காணிக்கை செலுத்துபவரை பலமாக ஆசிர்வதித்துத் தமது நன்றியறிதலை வெளியிடுகின்றனர். பட்டினத்துப் பிள்ளை முதலியோரைப் போல மனப்பூர்வமாக உலகை வெறுத்துப் பொருளில் பற்றற்றுத் திரிகரண சுத்தியாக ஒழுகும் மகான்கள் பல நூற்றாண்டுகளுக்கு ஒருவரே தோன்றுகின்றனர். ஆகவே, மண்ணாசை பொன்னாசையாகிய இரண்டின் கவர்ச்சிக்கும் இலக்காகாத மனிதர் இருப்பது அரிதிலும் அரிதென்றே மதித்தல் வேண்டும். ஆனால், பெண்ணாசையின் தன்மையோ வேறு மாதிரியானது. உலகத்தில் உள்ள ஜனங்களில் நூற்றில் தொண்ணூறு மனிதர் தமக்கு வாய்க்கும் மனைவிகளால் தமக்குக் கிடைக்கும் இன்பத்தோடு திருப்தியடைந்து ஒரே நிலையில் உறுதியாக நின்று தமது ஆயுட்காலத்தைக் கழிக்கின்றனர். சட்டைநாத பிள்ளை மாசிலாமணி முதலியோரைப்