பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

மாயா விநோதப் பரதேசி

வந்து என்னை அழைத்துக் கொண்டுபோய்ப் படுக்கையறையில் சேர்த்துவிடு” என்றான். வேலைக்காரி அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியில் சென்றாள்.

கந்தசாமி உடனே எழுந்து கதவின் உட்புறத்தைத் தாளிட்டுக் கொண்டான். அன்றைய தினம் தனக்கும் மாசிலாமணிக்கும் சோபன முகூர்த்தம் நடக்கப் போகிறது என்பதை எண்ணி, தனக்கு எதிரில் வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த அபாரமான ஆடை ஆபரணங்களைப் பார்க்க, அவன் தனக்குத்தானே சிரித்துக் கொண்டு, “ஆகா என்ன மனிதனுடைய பேதமைத்தனம்! கொஞ்ச நேரத்திற்கு முன் வேலைக்காரி வந்து, படுக்கையறையின் வைபவத்தையும், மாசிலாமணியின் அலங்காரச் சிறப்பையும் வர்ணித்ததைப் பார்த்தால், பரமசிவன் தன்னுடைய கலியான காலத்தில் அழைத்துக் கொண்டு போன குண்டோதரனைப் போல இவன் இந்த உலகத்திலுள்ள சிற்றின்ப சுகங்களை எல்லாம் ஒரே இரவில் மலை மலையாக அள்ளி விழுங்கி விடுவான் போலல்லவா இருக்கிறது! இவனுடைய ஆசை இருப்பதைப் பார்த்தால், இவன் என்னைக்கூட எடுத்து அப்படியே சாப்பிட்டு விடுவான் போலத் தோன்றுகிறதே! என்ன பைத்தியம் இது! என்ன மனப்பிராந்தி! நம்முடைய முன்னோர்கள் அறியாமலா இதற்கு சிற்றின்பமென்று பெயர் கொடுத்தார்கள்! ஒரு குடத்தைத் தண்ணீருக்குள் போட்டு ஆழ ஆழ அமுக்கி, தண்ணீரைப் பலமாக உள்ளே தள்ளித் தள்ளி விட்டாலும், அதற்குள் ஒருகுடம் ஜலம் கொள்ளுமே அன்றி நான்கு குடம் நிறையக் கூடிய ஜலம் நுழைந்து கொள்ளுமா? மனிதனுடைய புலன்கள் எவ்வளவு நுட்பமானவை! அவைகள் எவ்வளவு சுகத்தைத்தான் அநுபவிக்கப் போகின்றன! இவ்வளவு அபாரமான ஏற்பாடுகளோடு சோபன முகூர்த்தம் நிறைவேற்றப் போகும் இவனைவிட, ஒரு குடிசையில் சர்வ சாதாரணமான ஆடையாபரணங்களோடு வரும் தனது யெளவன மனைவியோடு சாந்திமுகூர்த்தம் நடத்தும் ஓர் ஏழையே அதிகமான சந்தோஷத்தை அடைவானென்று நினைக்கவேண்டும். இவனுடைய சயன மாளிகையின் அற்புத அலங்காரமெல்லாம் அந்தக் குடிசையில் இராதென்பது உண்மையே. அவ்விடத்தில் பூமாதேவியின் மடியே பஞ்சணை. ஒரு புதிய கோரைப்பாயே ரோஜா இதழ்.