பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

179

இடையே, தனது அழகைக் கண்டு தானே வியப்பும் கவர்ச்சியும் கொண்டு தனது கைகளையும் கால் களையும் மாறிமாறிப் பார்ப்பதும், உண்மையில் தான் பெண் தானோ என்று அப்போதைக்கப்போது சந்தேகிப்பதுமாய்த் தனது பொழுதைப் போக்கினான். தனக்கு மனையாட்டியாக வரிக்கப்பட்டிருந்த மனோன்மணியம்மாளைக் கண்டு, அவளது அழகையும் குணா அதிசயங்களையும் நேரில் கண்டு உணரும் பொருட்டு பெண்வேஷந் தரித்துப் போனது, தானே வேறொருவனுக்கு மனைவி ஆகி சோபன அறைக்குப் போவதற்கு ஆயத்தமாய்த் தன்னைத்தானே நன்றாக அலங்கரித்துக் கொண்டு தயாராய் இருக்கும் படியான அத்தகைய விபரீத நிலைமையில் கொண்டு வந்து விட்டுவிட்டதே என்று நினைத்து நினைத்து அவன் ஆச்சரிய வசத்தனாய் நெடுமூச்செறிந்தான். தான் ஒரு பெண்ணை மணந்து அவளோடு ஏகாந்தமாயிக்கும் காலத்தில் தான் அவ்விதமாகப் பெண்ணுருக்கொண்டு தன்னை அற்புதமாக அலங்கரித்துக் கொண்டு அவளுக்குக் காட்டினால், அவள் எவ்வளவு ஆனந்தமடைவாளென்ற எண்ணம் தோன்றியது. அடுத்த நிமிஷத்தில் அந்த எண்ணம் வேறுவிதமாக மாறியது. தன்னை மணப்பவள் தனது அபூர்வமான எழிலைக் கண்டு, தான் அவ்வளவு அழகாய் இல்லையே என்றும், இவ்வித தேஜஸ் வாய்ந்த புருஷன் தன்னைக் கண்டு எவ்விதம் ஆசைகொள்ளப் போகிறானென்றும் நினைத்து நிரம்பவும் பொறாமை கொண்டு வருந்தி அநாவசியமாகத் தன் மனத்தை வதைத்துக் கொள்வாளே அன்றி, உண்மையில் சந்தோஷமென்பதையே கொள்ள மாட்டாள் என்றும் கந்தசாமி நினைத்தான். பத்மா சூரனை அழிப்பதற்கு மாத்திரம் மகாவிஷ்ணு மோகனாவதாரம் எடுத்தாரே அன்றி, அந்த அவதாரத்தைத் தமது பத்தியான மகா லகஷ்மிக்குக் காட்டி அவளை மகிழ்விக்க நினைக்கவில்லை அல்லவா. அது போல, மனோன்மணியம்மாளை அபகரித்து வரவேண்டுமென்று துராசை கொண்டு ஆள்மாறாட்டமாகத் தன்னை எடுத்து வந்துள்ள பத்மா சூரனான மாசிலாமணியின் எண்ணத்தை மண்ணாக்கி விட்டுப் போவதோடு தான் திருப்தியடைய வேண்டுமன்றி, அதன் பிறகு தனது மனைவிக்குக் காட்டுவதற்காகத் தான் மோகனாவதாரம்