பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

185

கனிந்த இன்பம் நிறைந்த அமைப்பாய் இருப்பதோடு, அடக்கம் பணிவு சாந்தம் உருக்கம் முதலிய குணங்களின் அவதாரம் போல விளங்குகிறாள். இவ்வளவு சிலாக்கியமான குண விசேஷங்களமையப் பெற்ற இந்த அப்ஸ்ர ஸ்திரியோடு நான் இரண்டொரு நாள்கள் கூடியிருந்தபின் இவளை விட்டு விடுவதற்கு எப்படி என் மனம் இடந்தரும் ஒரு நாளும் அதற்கு என் மனம் இனங்காது. நான் ஒரு காரியம் செய்கிறேன். இவளை இங்கேயே ஒளித்து வைத்துவிட்டு, ரமாமணியும் இடும்பன் சேர்வைகாரனும் பட்டணத்திலிருந்து திரும்பி வந்தவுடனே, இவளைக் கொண்டு போய் எங்கேயோ விட்டுவிட்டதாக ரமாமணியிடம் சொல்லி விடுகிறேன். வேலைக்காரிகள், இடும்பன் சேர்வைகாரன் முதலியோரும் அதுபோலவே சொல்லும்படி ஏற்பாடு செய்து விடுகிறேன். அது உண்மையென்று, ரமாமணி நம்பி அவ்வளவோடு விட்டுவிடுவாள். அவளுடைய பகைமையைச் சம்பாதித்துக் கொள்வதும் உசிதமல்ல. ஏனென்றால், என்னுடைய குடும்ப ரகசியங்களில் பலவற்றை அவள் தெரிந்து கொண்டு இருக்கிறா ளாகையால், அவளால் கெடுதல் நேருவது நிச்சயம். ஆகையால், அவள் நம்பும்படி பொய் சொல்லிவிட்டு, இவளை வெளியில் அனுப்பாமல் இங்கேயே வைத்துக் கொள்ளுகிறேன்." என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டவனாய் பாதி மறைந்ததும் பாதி வெளிப்பட்டும் நின்று கொண்டிருந்த பெண் வேஷத்தைப் பார்த்தபடி மகிழ்ச்சியும் பூரிப்பும் நிறைந்தவனாய் மெய்ம்மறந்த நிலைமையில் நடந்துபோய் முத்துக் கட்டிலின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அவளைப் பார்த்தபடி மெதுவாகக் கனைத்துக் கொண்டான்.

அதற்கு முன் பேசிப் பழகாத புதிய பெண்ணினிடம் தான் எப்படிப் பேசுவதென்பதை அறியாமல், அவன் மிகுந்த லஜ்ஜையினால் வதைக்கப்பட்டவனாய் ஐந்து நிமிஷநேரம் தான் என்ன செய்வதென்பதை அறியாமல் தத்தளித்திருந்தான். அவன் மறுபடியும் இரண்டொருதரம் கனைத்துக் கொண்டு சிறிது துணி படைந்து தழுதழுத்த குரலில் பேசத் தொடங்கி, "பெண்ணே ஏன் அங்கே போய் அப்படி மறைந்து கொண்டு நிற்கிறாய்? உனக்காக