பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

மாயா விநோதப் பரதேசி

அமைக்கப்பட்டிருக்கும் இந்த சிம்மாசனத்தில் நீ வந்து உட்காருவதற்குத் தடை என்ன?"என்று கொஞ்சலாகக் கூறினான்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட போலிச் சோபனப்பெண் வாய் திறந்து மறுமொழி கூற வெட்கினவள் போல நடித்து, சகிக்க வொண்ணாத நாணமும் அச்சமும் கொண்டு தவிப்பவள் போலத் தனது கைகளையும் கால்களையும் உடம்பையும் நெளித்துத் தனது கடைக்கண் பார்வையால் அச்சத்தோடு அவனைப் பார்ப்பதும் கீழே குனிவதுமாய் நின்றான்.

அதைக் கண்ட மாசிலாமணி அவள் நல்ல உத்தம ஜாதி ஸ்திரீயாதலால், நிரம்பவும் கூச்சமடைந்து தத்தளித்து நிற்கிறாளென்று நினைத்துக்கொண்டு, அவளது மனத்தைத் தைரியப்படுத்த எண்ணி முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த வாஞ்சை ததும்பிய நயமான குரலில் உருக்கமாகப் பேசத் தொடங்கி, "பெண்ணே! பெண்ணே உன்னுடைய பெயர் இன்னதென்பது கூடத் தெரியவில்லையே! தெரிந்திருந்தால் அதைச் சொல்லியாவது பிரியமாக உன்னைக் கூப்பிடலாம். அதுவும் தெரியவில்லை! நான் உன்னை வேறே எவ்விதமாகக் கூப்பிட்டால், நீ பேசுவாய் என்பதும் தெரியவில்லை. உன்னை நான் சாதாரணமாக "பெண்ணே!” என்று கூப்பிடுகிறேனே என்ற கோபமாயிருக்குமா? அப்படியானால் உன்னை கண்ணே என்று கூப்பிடுகிறேன். ஏ கண்ணே! என்னிரு கண்மணியே! எங்கே, வா இப்படி; வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, உன் முகத்தை எனக்குக் காட்டு; தூரத்திலிருந்து உன் முகத்தைப் பார்க்கும்போதே, என் உள்ளம் பூரிக்கிறது. என் தேகம் பரவசமடைகிறது. என் பக்கத்தில் நீ வந்து உட்கார்ந்து உன் முகத்தைக் காட்டுவாயானால், அதைப் பார்த்தவுடனே என் கலியெல்லாம் நீங்கிவிடும் என்பது திண்ணம். தாமரை இதழ் போல மிருதுவாக இருக்கும் உன்னுடைய தேகம் என்மேல் படுமானால், நான் உடனே சாயுஜ்ய பதவி அடைந்தவன் போல ஆவது நிச்சயம். நான் இதற்கு முன் பழகாத புது மனிதனாயிற்றே என்றும், நான் எப்படிப்பட்ட குணமுடைய மனிதனோ என்றும் நீ ஒரு வேளை பயப்படுகிறாய் போலிருக்கிறது. நீ இனி எதைப் பற்றியும் பயப்படவே தேவையில்லை.