பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

191

கூடாதா? நின்றது போதும்; வா பெண்ணே! உன்னுடைய பெயரைக் கூட நீ இன்னமும் தெரிவிக்க மாட்டேன் என்கிறாயே?”

போலிப்பெண் கட்டிலண்டை வர உத்தேசிக்கிறவள் போலவும், ஆனால், வெட்கத்தினால் பின்னடைகிறவள் போலவும் நடித்துத் தனது கால்களை எடுத்து முன்னும் பின்னுமாக வைத்த வண்ணம் முன்னிலும் பன்மடங்கு அதிக இனிமையாக அவனை நோக்கிப் புன்னகை செய்து கீழே குனிந்து நாணிக்கோணித் தனது குரலைக் கீச்சுக் குரலாகமாற்றி, ஒரு யெளவனப்பெண் பேசும்போது உண்டாகும் கோகிலத்வனி போன்ற கணிரென்ற இனிமையான குரலில் பேசத்தொடங்கி, 'இந்த அடிமையின் மேல் அபாரமான பிரியம் வைத்து எவ்வளவோ பிரயாசைப்பட்டு என்னைக் கொணர்ந்து வைத்திருக்கும் தாங்கள் என்னுடைய பெயரை இன்னமும் தெரிந்து கொள்ளவில்லை என்றால், அதை யார் நம்புவார்கள்" என்று நிரம்பவும் பணிவாகவும் கொஞ்சலாகவும் மழலையாகவும் கூறினாள்.

அவளது குரலின் இனிமையையும், அவள் நடந்துகொண்ட பணிவான மாதிரியையும், அவளது சொல்லின் நயத்தையும் உணர்ந்து கட்டிலடங்கா மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்த மாசிலாமணி, "கண்ணே உன்னிடத்தில் நான் பொய் பேசுவேனா? உன்னுடைய பெயர் எனக்குத் தெரிந்திருந்தால், அதை நான் இந் நேரம் ஆயிரம் தரம் சொல்லி இருப்பேனே. பஞ்சாக்ஷரம், அஷ்டாக்ஷரம் முதலிய மந்திரங்களைச் சொல்லி ஜெபித்தால், மனசில் இன்பம் ஊறுமென்று பைத்தியக்காரர்கள் சொல்லிக் கொண்டு திரிகிறார்களே. உன்னுடைய பெயரைச் சொல்லி ஜெபித்துக் கொண்டே இருந்தால் உண்மையில் பேரின்பம் மனசில் சுரக்குமென்பதில் சந்தேகமே இல்லை. மனிதருடைய சகலமான ஆசையையும் பூர்த்தி செய்து, அவர்களுக்குப் பேரின்ப சுகத்தின் தன்மையைக் காட்டக் கூடிய பேசும் தெய்வம் நீயே என்றாலும், அது முற்றிலும் பொருந்தும். அப்படி உன்னுடைய பெயர் இன்ன தென்பது தெரிந்திருந்தால், நான் இந்நேரம் சும்மா இருப்பேனா? பிரமாணமாகச் சொல்லுகிறேன். உன்னுடைய பெயர் எனக்குத் தெரியவே தெரியாது?" என்றான்.