பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

193

நன்றாக விளங்குகிறது. தாங்கள் ஆள்களை விட்டு அக்கிரமமாக அபகரித்து வரும்படி தங்களுடைய மனசில் அப்படிப்பட்ட விபரீதமான ஆசையை உண்டாக்கிய அந்தப் பெண்ணைத் தாங்கள் இவ்வளவு சுலபத்திலும் சீக்கிரத்திலும் மறந்து, நான் இன்னாள் என்பதையே தெரிந்து கொள்ளாமல் என்னை உடனே கலியாணம் செய்து கொண்டீர்களே? இது தர்மமாகுமா?

மாசிலாமணி:- அந்த விஷயத்திலும் என்னைக் காட்டிலும் நீயே அதிகமான குற்றவாளி என்று நினைக்கிறேன். பட்டணத்திலுள்ள கலெக்டருடைய பெண்ணான மனோன்மணியம்மாளைக் கண்டு நான் ஆசைகொண்டது நிஜமே. ஆனால், என்னுடைய ஆள்கள் அவளை விட்டு தவறுதலாக உன்னை எடுத்துக்கொண்டு வந்து விட்டார்கள். அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்பது, நான் உன்னைக் கலியாணம் செய்து கொண்ட பிறகே எனக்குத் தெரிந்தது. ஆகையால், நான் உன்னை மனோன்மணியென்று நினைத்தே கலியாணம் செய்து கொண்டேன். இன்றைய தினம் சென்னையிலிருந்து வந்த சமாசாரப் பத்திரிகையைப் படித்த பிறகுதான் இவர்கள் ஆள்மாறாட்டாக உன்னை எடுத்து வந்து விட்டார்களென்பதை அறிந்து கொண்டேன். ஆகையால், நான் செய்ததில் தவறு ஒன்றுமில்லை. வேலைக்காரி உன்னிடம் சொன்ன விவரத்தைக் கேட்ட உடனே, நீ உண்மையை வெளியிட பயந்து பேசாமலிருந்து விட்டாயென்று சொன்னதை நான் ஒரு விதத்தில் ஒப்புக் கொண்டதாக நீ நினைத்துவிடக் கூடாது. நீ எவ்வளவுதான் பயந்திருந்தாலும் நான் அந்தப் பெண்ணைக் கண்டு, அவள்மேல் ஆசை கொண்டு, அவளைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்று அபகரித்து வந்து இருக்கிறேனென்று வேலைக்காரி சொன்னாளே, கலியான விஷயம் பெரிய விஷயமல்லவா. உண்மையான வரலாற்றை வெளியிடாமலிருந்தே நீ இந்தக் கலியாணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமா? நீ அழகும் நற்குணங்களும் வாய்ந்தவளாய் இருக்கிறாய் என்பதை நான் நேரிலும் வேலைக்காரியின் மூலமாகவும் பின்னால் தெரிந்து கொண்டதனால், நான் என் மனசை ஒரு விதத்தில் சமாதானப் படுத்திக் கொண்டேன். நடந்தபோன தவறை நான் இனி திருத்த முடியாதென்றும், இவளும் நமக்குத் தகுந்தவளே என்றும்

மா.வி.ப. II-13