பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

மாயா விநோதப் பரதேசி

முக்கியமான சந்தேகமிருக்கிறது. நான்தான் ஏதோ மதியீனத்தினால் உண்மையைச் சொல்லாமல் சும்மா இருந்துவிட்டேன். தாங்கள் மனோன்மணியம்மாளைக் கண்டு அவள் பேரில் பிரியப்பட்டு அவளை அபகரித்து வரச் சொன்னீர்களே. கலியாண காலத்தில் நான் மணையில் வந்து உட்கார்ந்து கொண்டேனே. நான் மனோன்மணியம்மாள் அல்லவென்பது அப்போது தங்களுக்குத் தெரியவில்லையா? கலியாணப் பெண்கள்தான் தலையைக் கீழே குனிந்தபடி உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும். புருஷர் கருப்போ சிவப்போ என்பது கூட அவர்களுக்குத் தெரிய ஏதுமில்லை. கலியாண மாப்பிள்ளை பெண்ணின் முகத்தைப் பார்க்காமல் தாலிகட்ட முடியுமா? தாங்கள் தாலி கட்டிய போது கூடவா, நான் மனோன்மணியம்மாள் அல்லவென்பதைத் தெரிந்து கொள்ளவில்லை?

மாசிலாமணி:- (திடுக்கிட்டு, சிறிது நேரம் தத்தளித்தவனாய்) ஏதேது! நீ மகா பொல்லாதவளாக இருக்கிறாயே! நீ கேள்விகள் கேட்கிற சாமர்த்தியத்தைப் பார்த்தால், வக்கீல்களெல்லோரும் உன்னிடம் வந்து பிச்சை வாங்கவேண்டும் போல இருக்கிறதே. நீ செய்த தவறைப்பற்றி நான் கேட்டால், என்னையே நீ மடக்கி மடக்கி குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்துவிட்டாயே! இவ்வளவு அபாரமான மனோதிடத்தோடு கேள்விகள் கேட்கும் நீ என் பக்கத்தில் வந்து உட்காருவதற்கு மாத்திரம் ஏன் பயப்பட்டு நாணிக் கோணி அவ்வளவு தூரத்தில் நிற்கிறாய் என்பது தெரியவில்லை. நீ கேட்கும் சகலமான கேள்விகளுக்கும் நான் திருப்திகரமான உத்தரம் சொல்லுகிறேன். நீ முதலில் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள். நீ இவ்வளவு தூரம் வளைத்து வளைத்துப் பேசுகிறாய். உன்னுடைய பெயர் என்ன என்பதைக் கூட. நீ இன்னமும் சொன்னபாடில்லையே! உன்னுடைய சாமர்த்தியமல்லவா சாமர்த்தியம். நீ முதலில் இங்கே வந்து உட்காரப் போகிறாயா? இல்லையா? நான் எழுந்து வரட்டுமா? - என்று கூறி, உடம்பைத் தூக்கிக்கொண்டு எழுந்திருக்க எண்ணுகிறவன் போல நடித்து மறுபடி கீழே உட்கார்ந்து கொண்டான்.