பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

மாயா விநோதப் பரதேசி

நான் இந்த விசேஷ அநுபந்தத்தின் மூலமாய்த் திருத்த முன் வந்தேன்.

வேலாயுதம் பிள்ளை முதலியோர் க்ஷேமமாய் இருப்பது ஒரு விஷயத்தில் சந்தோஷத்தை உண்டாக்கியது ஆனாலும், உண்மையில் அங்கஹீனப்பட்டு ஸ்மரணையின்றி ஆஸ்பத்திரியில் கிடப்பவர்கள் இன்னார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தடுக்க முடியாத ஆவலினால் தூண்டப்பட்டு நான் உடனே ஆஸ்பத்திரிக்குப் போய் விசாரித்தேன். மற்ற எல்லோரும் இன்னும் பிரக்ஞையற்றுக் கிடக்கிறார்கள். முகத்தில் அக்கினித் திராவகம் கொட்டப்பட்ட யௌவனப் புருஷன் மாத்திரம் அப்போதைக்கப்போது கண் திறந்து வார்த்தைகள் சொல்லுகிறானாம். போலீசார் அவனிடம் கேட்டதில், அவரது வரலாற்றில் ஒரு பாகம் மாத்திரம் வெளியாயிற்றாம். அவர்கள் இன்னார் என்பது சந்தேகமறத் தெரிந்து போய்விட்டதாம். அவர்கள் கும்பகோணத்தில் பெரிய தெருவில் இருப்பவர்களாம். மூக்கறுபட்டுக் கிடக்கும் ஸ்திரீயின் பெயர் ரமாணியம்மாளாம். காதறுபட்டுக் கிடப்பவர்கள் அவளுடைய தாயும் தகப்பனுமாம். கண்கள் போய்க் கிடப்பவன் அவர்களிடம் வேலை பார்க்கும் போயியாம். முகத்தில் அக்கினித் திராவகம் கொட்டப்பட்டுக் கிடப்பவன் பக்கிரியா பிள்ளை என்ற ஒரு தவில்காரனாம். இது நிச்சயமான பெயர்களாம். அவர்களுக்கு இந்த விபரீத சம்பவம் நேர்ந்த வரலாற்றை இன்னம் தெரிந்து கொள்ள முடியவில்லையாம். இதைக் கேட்டுக் கொண்டு நான் வீடு வந்து சேர்ந்தேன். விரிவான செய்தியை நாளைய தினம் அறிந்து மறுபடியும் எழுதுகிறேன்.

என்று எழுதப்பட்டிருந்த அதிவிபரீதமான செய்தியைப் படிக்கவே, மாசிலாமணியின் தலையில் பெருத்த இடி திடீரென்று விழுந்தது போலாய்விட்டது. அப்போது அவனது மனநிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை விவரிப்பதைவிட வாசகர்கள் யூகித்துக் கொள்வதே நன்று.

★ ★ ★