பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

மாயா விநோதப் பரதேசி

மூட்டையாகக் கட்டி எடுத்து வந்திருந்தாள் ஆதலால், அவள் அந்த மூட்டையை அன்னியரிடம் கொடுக்காமல்தானே எடுத்துக் கொண்டு ஸ்டேஷன் விடுதிக்குள் நடந்தாள். ரமாமணியம்மாளது தகப்பனார் சுத்த ஜலமும், பாலும் நிறைந்த இரண்டு பெருத்த வெள்ளிக் கூஜாக்களைத் தமது இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றார். ரமாமணியம்மாளோ மற்ற நாட்களைக் காட்டிலும் அன்று பன்மடங்கு அதிக அழகாகவும் கவனிப்பாகவும் தன்னை அலங்கரித்துக் கொண்டு கட்டிலடங்கா மகிழ்ச்சியும் குதுகலமும் நிறைந்தவளாய் வண்டியை விட்டு இறங்கினாள். அவள் கனிந்த பக்குவமும், இயற்கையிலேயே வசீகரமாக அமைந்த அழகும், சிவப்பு நிறமும் வாய்ந்த கட்டழகி என்பது முன்னரே கூறப்பட்ட விஷயம். மாசிலாமணி வந்து கண்டு கொள்வானோ என்ற கவலையும் பீதியும் கொண்டு அவள் தனது மாளிகையில் பக்கிரியாப் பிள்ளையோடு ஏகாந்தமாக இருப்பதற்கு மாறாக அன்று தான் அவனுடைய நிர்ப்பந்தமின்றித் தனது ஆருயிர்க் காதலனான பக்கிரியாப் பிள்ளையோடு முதல் வகுப்பு வண்டியில் வெகு உல்லாசமாகப் பிரயாணம் செய்யலாம் என்றும், தன்னிடம் இருந்த பெருந் தொகையைச் செலவு செய்து தானும் அவனும் சென்னையில் பல தினங்கள் இருந்து ஆனந்தமாகப் பொழுது போக்கலாம் என்றும் நினைத்து மிகுந்த மன எழுச்சியும் உற்சாகமும் பூரிப்பும் அடைந்திருந்தாள் ஆதலால், அதற்குப் பூர்வாங்கமாக அவள் அன்றைய தினம் பாதாதி கேசம் வரையில் வைர நகைகளையே அணிந்து கொண்டதன்றி, அப்போதே மடிப்புப் பிரித்ததும், தாழம்பூ வாசனை ஏற்பட்டதுமான புத்தம் புதிய பனாரீஸ் புட்டாப் புடவையும் வெல்வெட்டு ரவிக்கையும் அணிந்திருந்தாள். அந்த வடிவழகி தனது அபாரமான அளகபாரத்திற்கு வாசனைத் தைலமூட்டிப் பின்னித் தேருருளைப் போலச் சுருட்டி சிவப்புப்பட்டு நாடாவால் கட்டி அதன் இடையில் வைர ஜடபில்லை அணிந்து, அதைச் சுற்றிலும், ரோஜாப் புஷ்பமும் ஜாதி மல்லிகைப் புஷ்பமும் சூடியிருந்ததும், காதில் அழகான வைர மாட்டல்கள் அணிந்திருந்ததும், இடுப்பில் ஜெகஜ் ஜோதியாக மின்னிய ஒட்டியாணம் அணிந்திருந்ததும், கைகளில் குஞ்சங்கள் நிறைந்த வங்கி நாகஒத்து முதலியவைகளையும்,