பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

மாயா விநோதப் பரதேசி

ஆனந்தமாகப் பேசி, சரசமாக இருக்க வேண்டும் என்ற ஆவலில் அவள் உலகையும் தன்னையும் மறந்திருந்தமையாலும், அதற்கு இடையூறாக ஸ்டேஷன் மாஸ்டர் நின்று பிதற்றிக் கொண்டிருந்த சொற்கள் அவளுக்குக் கன்ன கடூரமாக இருந்தன. ஸ்டேஷன் மாஸ்டர் பெட்டை மோகம் பிடித்தவன் என்றும், தனது அழகைக் கண்டு மயங்கி அவன் ஏதேதோ பிதற்றுகிறான் என்றும், ஆயினும், அவனால் தங்களுக்கு ஏற்பட்ட சௌகரியங்களைக் கருதி தான் மௌனம் சாதிப்பதே உசிதமான காரியம் என்றும் நினைத்தவளாய், ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்ப்பது போலப் பக்கிரியா பிள்ளையைப் பார்ப்பதும், நாணிக் கீழே குனிவதுமாய் இருந்தாள். அப்போது ரயில் புறப்படும் நேரமாகி, அதற்கு மேலும் ஐந்து நிமிஷ காலம் கழிந்துவிட்டது ஆகையால், எஞ்சின் ஓட்டுகிறவர் பல தடவைகளில் ஊதி ஊதி துரிதப்படுத்தத் தொடங்கினார். பின் பக்கத்தில் இருந்த கார்ட், ஸ்டேஷன் மாஸ்டர் வழக்கப்படி தம்மிடம் வருவார் என்று எதிர்பார்த்துப் பார்த்து உடனே இறங்கி ஸ்டேஷன் மாஸ்டரைத் தேடிக் கொண்டே ஓடி வந்து, இரண்டாவது வகுப்பு வண்டியண்டை அவர் நிற்கக் கண்டு, வண்டி புறப்படுவதற்கு அதிக காலஹரணம் ஆகிவிட்ட தென்று கோபித்துக் கொள்ள, அப்போதே தமது சுய உணர்வை அடைந்த ஸ்டேஷன் மாஸ்டர் அவரை சாந்தப்படுத்தி, அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்களை முடித்து, "ஐயா! இந்த வண்டியில் நம்முடைய ஊர்ப் பெரிய மனுஷியாள் வீட்டு ஜனங்கள் இருக்கிறார்கள். இவர்கள் பட்டணம் போகிறார்கள். வேறே யாரும் இதில் ஏறாமல் பார்த்துக் கொள்ளும்" என்று கேட்டுக் கொள்ள, கார்ட் தமது பார்வையை உட்புறத்தில் செலுத்தி அவ்விடத்தில் இருந்த மனிதர்களைக் கவனித்துப் பார்த்து விட்டு அப்பால் போய், வண்டியை விடும்படி எஞ்சின் ஓட்டிக்குச் சைகை காட்ட, அடுத்த நிமிஷம் வண்டி, நகரத் தொடங்கியது. நகர்ந்த வண்டி வரவரத் தனது விசையை அதிகப்படுத்திக் கொண்டு ஓடத் தலைப்பட்டு வெகுதூரம் போய் மறைகிற வரையில் ஸ்டேஷன் மாஸ்டர் சித்தப் பிரமை கொண்டவர்போல அப்படியே நின்று நெடுநேரம் கழித்துத் தனது அறைக்குச் சென்றார்.