பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

241

அவ்வாறு தன்னைக் காண்போரது சித்தத்தை எல்லாம் கலக்கி வேதனைக்கு இருப்பிடமாக்கிக் கொண்டு போன வசீகர அலங்காரியான ரமாமணியம்மாள் இருந்த வண்டிக்குள் என்ன நடந்தது என்பதை இனி நாம் கவனிப்போம். அவர்கள் இருந்த வண்டி இரண்டாவது வகுப்பு வண்டியானாலும், முதல் வகுப்பு வண்டிக்கும் அதற்கும் அதிக வித்தியாசம் எதுவும் காணப்படவில்லை. முதல் வகுப்பு வண்டியில் உள்ள சகலமான சௌகரியங்களும் அந்த வண்டியில் இருந்தன. அதில் ஒரே காலத்தில் ஆறு ஜனங்கள் வசதியாக இருப்பதற்கும் இரவில் படுத்துத் தூங்குவதற்கும் ஆறு சோபாக்கள் போடப் பெற்றிருந்தன. ஒரு சோபாவில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது இன்னொரு சோபாவில் இருப்பவர்களுக்குத் தெரியாதிருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இடையிடையில் நான்கடி உயரத்தில் மறைவுகள் அமைக்கப் பெற்றிருந்தன. சோபாக்களும் சாய்ந்து கொள்ளும் முதுகுப் பக்கங்களும் வழுவழுப்பான தோல் போர்த்தப் பெற்ற கனமான மெத்தைகள் உடையவையாய் இருந்தன. அவர்கள் ஏறிச் சென்றது துருமெயில் வண்டி ஆதலால், வண்டி அபாரமான விசையோடு மாயமாய்ப் பறந்தது ஆனாலும், அதனால், அசைவாவது ஓசையாவது சிறிதும் உண்டாகவில்லை. ஆனால் வழுவழுப்பான மெத்தையில் உட்கார்ந்திருப்போருக்கு வண்டியின் ஒழுங்கான ஓட்டம் சப்பிரமஞ்சத்தில் உட்கார வைத்து ஆனந்தமாய்த் தாலாட்டப்படுவது போல், முற்றிலும் புதுமையான ஒருவித இன்பத்தை உண்டாக்கியது.

வண்டி கும்பகோணத்தை விட்டுப் புறப்பட்ட காலத்தில், இரவில் அதிக நேரம் கழியவில்லை ஆதலால், அப்போதே ஒவ்வொருவரும் தனித்தனியாக சோபாவின் மீது படுத்துத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களது மனதில் உண்டாகவில்லை. ரயிலின் சுகமான ஓட்டத்தினால் ஏற்பட்ட இன்பத்தை அனுபவித்து, வழியில் காணப்படும் ஸ்டேஷன்கள் முதலியவற்றின் வேடிக்கைகளைக் கவனித்த வண்ணம் இரவு முழுதும் விழித்துக் கொண்டே பட்டணம் போய்ச் சேரவேண்டும் என்ற ஒருவித உற்சாகமும் மன எழுச்சியும் தோன்றி அவர்களை ஊக்கத்